தொட்டில் கட்டி விளையாடிய சிறுமி கழுத்து இறுக்கி பலி

 

பெரம்பூர், மே 15: வில்லிவாக்கம் ரங்கதாஸ் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள்கள் ஹரிணி, தாமரை. இதில், ஹரிணி திருமணமாகி, கணவர் முரளியுடன் வசித்து வருகிறார். தாமரை (11), அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை சரவணன் வேலைக்கு சென்று விட்டார். அவரது மகள் ஹரிணி மற்றும் அவரது கணவர் முரளி ஆகியோரும் வேலைக்கு சென்று விட்டனர். தாமரை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தந்தை இரவு 9 மணி அளவில் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கதவை தட்டி உள்ளார்.
நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சரவணன் அவரது நண்பர் நவீன் என்பவர் உதவியுடன் மெயின் கதவை உடைத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சிறுமி தாமரை புடவையால் கட்டப்பட்ட தொட்டிலில் சுயநினைவின்றி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே உள்ளே சென்று குழந்தையை மீட்டு ஆட்டோ மூலம் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
தகவலறிந்த ராஜமங்கலம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமி தாமரை புடவையால் தொட்டில் கட்டி விளையாடி வந்ததும், நேற்று அவ்வாறு விளையாடும் போது கழுத்து இறுக்கி துடிதுடித்து உயிரிழந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: