பெரம்பூர், மே 15: பெரம்பூர், வில்லிவாக்கம் மற்றும் பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி ரயில்வே சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால், வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் ஆகியோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை 5.15 மணிக்கு வில்லிவாக்கம், பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்துக்கு இடையே சிக்னல் கோளாறு காரணமாக, அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும், அடுத்தடுத்து வந்த ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவித்தனர். இதன்பின்னர் ரயில்வே ஊழியர்கள் நேரில் வந்து சிக்னல் கோளாறை சரி செய்தபின்னர்.
அடுத்தடுத்து ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் சுமார் 45 நிமிடம் காலதாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தவித்தனர். வில்லிவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அந்த இடத்தில் ரயில்களின் வேகத்தை குறைத்து இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தியதால் வில்லிவாக்கம் பகுதியை கடக்கும் போது மட்டும் ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதாகவும், இதனால் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
