அரசு தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

பூந்தமல்லி, மே 12: அரசு பள்ளிகளில் 2026ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளியில் 2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி தலைமை தாங்கினார். கல்வியாளர் மணிமாறன், பள்ளி மேலாண்மைக் குழுவினர் முன்னிலை வகித்தனர். மாற்று ஊடக மையம் இயக்குநர் காளீஸ்வரன் மற்றும் அவரது குழுவினர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடையே கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தாரை தப்பட்டை முழங்க நடனமாடி கலை நிகழ்ச்சிகள் மூலம் கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: