அவசர தேவை எனக்கூறி நூதன மோசடி கார் டிரைவரிடம் ரூ.12,000க்கு போலி செல்போன் விற்பனை

 

அண்ணாநகர், மே 9: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (31), சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியில் தங்கி, கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி அண்ணாநகர் வள்ளியம்மாள் கல்லூரி தெருவில் காரில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடும்பத்துடன் வந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமால் போய்விட்டது, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் ஒரு மாதம் முன்பு புதிதாக வாங்கிய விவோ செல்போனை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளனர்.
உடனே, சத்தியராஜ் அவர்களிடம் 12,000 ரூபாய் கொடுத்து செல்போனை வாங்கியுள்ளார். பின்னர் மாலையில் சத்தியராஜ் தனது வீட்டுக்கு அருகே உள்ள செல்போன் கடைக்கு சென்று செல்போனை சோதனை செய்துள்ளார். அப்போது அது போலியான செல்போன் என தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சத்யராஜ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போலி செல்போன்களை விற்ற மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தை சேர்ந்த பாலு (49), இவரது மனைவி ஜாலிகன் பிரமிளாபாய் (42), மகன் பிரவின் (18) மற்றும் உறவினர் தன்ராஜ் (27) ஆகிய நான்கு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 26 போலி செல்போன்கள், 27 சார்ஜர்கள் மற்றும் ரூ.9,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், 4 பேரும் மும்பையிலிருந்து போலி செல்போன்களை வாங்கி வந்து சென்னையில் அப்பாவி நபர்களிடம் அவசர தேவைக்காக ஒரிஜினல் நிறுவன செல்போனை விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: