வலங்கைமான்,ஏப்.30: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி குரு பரிகார கோயிலில் சித்திரை பெருந்திரு விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில் உள்ளது.
இது நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா அதி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஒன்பதாம் நாளான நேற்று திருத்தேர் திருவிழா நடைபெற்றது. திருத்தேரில் தங்க கவச அலங்காரத்தில் குரு பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார். முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.
முக்கிய வீதிகள் திருத்தேர் வலம் வந்தது. நாதஸ்வர இன்னிசை முழங்க வலம் வந்த திருத்தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலர் ராஜா இளம்வழுதி, தக்கார் வீரபாண்டியன், கோயில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். வலங்கைமான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தீயனைப்புத்துறையினரும், மின்வாரியத்துறையினரும் பணியில் ஈடுபட்டனர்.
