வாடிப்பட்டியில் மீனாட்சி அம்மன் கோயில் திருத்தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வாடிப்பட்டி, மே 1: வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த 29ம் தேதி நடந்தேறியது. அடுத்ததாக திருத்தேர் பவனி நேற்று முந்தினம் இரவு தொடங்கி விடிய விடிய அதிவிமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி கோயில் முன்பாக வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினர். பின்னர் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் மற்றும் கிராம மக்கள் தேர் பவனியை தொடங்கி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து குலசேகரன்கோட்டை, ராமநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ஆர்வி நகர் உள்ளிட்ட வாடிப்பட்டியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் உலா வந்த திருதேரினை வரவேற்ற வழிநெடுகிலும் பக்தர்கள், சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை ஆராதனைகள் செய்து வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலை தேர் கோயிலை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

 

Related Stories: