விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை நேரடி முறையில் நெல் விதைப்பு

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், நவரைப் பட்டத்தில் நடவு செய்த நெல் பயிர்களை தற்போது அறுவடை செய்து வருகின்றனர். மேலும் நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நவரைப் பருவத்தை நிறைவு செய்த விவசாயிகள், தற்போது சொர்ணவாரி பருவத்தில் நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பட்டத்திற்கு தேவையான நெல் விதை கோ-51 ரகம் வேளாண்மை அலுவலகத்தில் 15 டன் இருப்பு உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும், சொர்ணவாரி பட்டத்தில் கோ-51 ரக நெல் மட்டுமின்றி, கோ-54, ஏடிடி 54, ஏடிடி 59, டிபிஎஸ் 5-உள்ளிட்ட ரகங்களும் சிறந்த மகசூல் கிடைக்கும். இதில் ஏடிடி 59-ரக நெல் 110-நாட்களில் ஒரு ஏக்கருக்கு 40-முதல் 50-மூட்டைகள் வரை சிறந்த மகசூல் பெறலாம்.

ஆனால் இந்த ரகம் ஏடிடி 36-போன்று மோட்டாவாக காணப்படும். விவசாயிகளுக்கு நல்ல பலன் அளிக்க வல்லது எனவும் அவர் தெரிவித்தார்.தற்போது விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், நடப்பு சொர்ணவாரி பட்டத்தில் நேரடி நெல் விதைப்பு கருவிகள் மூலம், நெல் விதைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் ஒரு ஏக்கருக்கு 10-கிலோ விதை போதுமானது. இதுமட்டுமின்றி ஒரு ஏக்கர் விதைப்புக்கு ரூ.1500 மட்டுமே செலவு செய்யக்கூடும். இதன்காரணமாக நெல் பயிர் நன்கு காற்றோட்டமாக வளர்ந்து, அதிக மகசூல் கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நடவு செலவு, நாற்று பறித்தல் செலவு, உள்ளிட்ட செலவுகள் குறைந்து கடன் சுமை இன்றி இருக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

Related Stories: