சிவகங்கை: கொளுத்தும் கோடையில் சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வேளாண் பயிராக கலர் கத்தரிக்காய் சாகுபடி மாறி இருக்கிறது. காய்கறிகளில் அரசன் கத்தரிக்காய் என்பாருண்டு.. இதை ஆமோதிக்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிகுறிச்சி, சொக்கநாதிருப்பு, அல்லிநகரம், கலியாந்தூர், பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் கத்தரிக்காய் விவசாயம் கோடை காலத்தில் அதிக அளவில் செய்யப்படுகிறது. நெல் அறுவடை செய்த வயல்களில் உழவு செய்து கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிடுவார்கள்.
கத்தரியில் கலர் கத்தரி, வெள்ளை கத்தரி, வரி கத்தரி என பல ரகங்கள் இருந்தாலும் மானாமதுரை மற்றும் திருபுவனம் வட்டாரத்தில் கலர் கத்தரி ரகமே அதிக அளவு பயிரிடப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில், குறிப்பாக மேற்கண்ட இரு வட்டாரங்களில் கலர் கத்தரிக்காய் சாகுபடி ஒரு லாபகரமான விவசாயமாக உள்ளது. திருப்புவனம், மானாமதுரை வட்டாரங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.கத்தரி செடி நடவு செய்யப்பட்ட 90வது நாளில் இருந்து நான்கு நாட்கள் இடைவெளியில் ஏழு மாதங்கள் வரை கத்தரிக்காய் அறுவடை செய்யலாம். இந்த ரக கத்தரி வளர குறைந்த அளவே தண்ணீர் தேவை என்பதுடன், ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
மதுரை காய்கறி சந்தைகளில் கத்தரிகாய் தேவையை பூர்த்தி செய்வது மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் விளையும் கத்தரி காய்கள் தான். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நோய் தாக்கம் குறைந்து விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஏக்கருக்கு ரூ.40,000 செலவு செய்தால் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.
தொடர்ச்சியாக சித்திரை திருவிழாக்கள், சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் கத்தரிக்காய்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது விவசாயிகளிடம் இருந்து கிலோ 30 ரூபாய்க்கு கத்தரிக்காய்களை வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். சில்லறை விற்பனையில் கிலோ ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு இந்த கலர் கத்தரி சாகுபடி ஒரு நிலையான வாழ்வாதாரமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
