டிராவல்ஸ் பஸ் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் தொழுகைக்கு சென்ற முதியவர் பரிதாப பலி

*போலீசார் விசாரணை

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் டிராவல்ஸ் பஸ் பின்னால் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, அடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பஷீர்அஹமது மகன் அலாவுதீன்(60). இவருக்கு சம்சாத் பேகம் என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

முதல் மகன் ராஷித்(30) வெளி நாட்டில் வேலை பார்க்த்து வருகிறார். 2வது மகன் அனஸ்தீன்(22) என்பவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். இதனால் தந்தை அலாவுதீன் பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ் சாலையிலுள்ள தீரன் நகரில் கல்லூரியில் படிக்கும் மகனுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

அலாவுதீன் பெரம்பலூர், துறைமங்கலத்தில் உள்ள பள்ளிவாசலில் தினமும் தொழுகைக்குச் செல்வார். வழக்கம்போல் நேற்று (26ம்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குத் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் துறைமங்கலத்தை நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 ரோடு மேம்பாலம் அருகே தெற்கிலிருந்து வடக்காக சென்று கொண்டிந்தார்.

அப்போது அதே திசையில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 36 பயணிகளுடன் சென்ற டிராவல்ஸ் பஸ் அலாவூதீன் சென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த வாகன விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அலாவுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்து, உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனை சவக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். டிராவல்ஸ் பஸ் டிரைவரான, சென்னை, சாலிகிராமம், விஜயராகபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்(42) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: