லாலாப்பேட்டை : லாலாப்பேட்டை அருகே திம்மாச்சிபுரத்தில் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே அமர்ந்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட வீரவல்லி கிராம பொதுமக்கள். சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கேப்பேட்டை ஊராட்சி வீரவல்லியில் சுமார் 150 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பொதுமக்களின் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படும் காவிரி குடிநீர் கடந்த சில மாதங்களாகவே முறையாக வழங்கப்படவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூட ஊராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகம் செய்யப்பட்ட காவிரி குடிநீர் கழிவுகள் கலந்து காவிநிறத்தில் வந்தது. புகார் அளித்து சரி செய்த பின்னரும் இந்தப் பகுதியில் கடந்த 2 மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை.
இதுகுறித்து கே.பேட்டை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தினர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் நேற்று காலை திம்மாச்சிபுரம், திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே அமர்ந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், மாயனூர் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் லாலாபேட்டை போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் கே.பேட்டை ஊராட்சி செயலாளர் மற்றும் குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் வந்து இந்த பிரச்சனையை மதியம் 12.30 மணிக்குள் தீர்த்து வைப்பதாக கூறியதையடுத்து அவபோராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் காவிரி குடிநீர் முறையாக தர முடியவில்லை என்றால் அப்பகுதியில் புதிதாக போர் அமைத்து குடிநீர் தேக்க தொட்டி மூலம் எங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
