கிலோ ரூ.50க்கு விற்பனை
நிலக்கோட்டை : ஆத்தூர் அருகே வீரக்கல் பகுதியில் கொத்தவரங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காய்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வீரக்கல், கும்பம்பட்டி, வக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் செடிவகை காய்கறி வகையை சேர்ந்த கொத்தவரங்காயை ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்து வருகின்றனர்.
செடியில் கொத்துக் கொத்தாக காய்க்கும் இயல்பை உடைய இந்த காய், இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சமையலுக்கு பயன்படுத்துவதை விட, கொத்தவரை விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பிசின் உணவுத்தயாரிப்பு தொழிலில் முக்கிய சேர்க்கைப் பொருளாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பணப்பயிர்களில் முக்கியமானதாக கொத்தவரங்காய் உள்ளது.
ஜூன்-ஜூலை மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த பராமரிப்புடன், 45-60 நாட்களில் அறுவடைக்கு வருவதால் விவசாயிகள் கொத்தவரங்காய் சாகுபடியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொத்தவரையில் இருக்கும் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் போலேட் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச்சத்தும், சுண்ணாம்புத் சத்தும் இதில் அதிகபட்சமாக உள்ளன.
கொத்தவரையில் கிளைகோ நியூட்ரியன்ட் என்னும் மருத்துவ வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதிக அளவிலான போலிக் அமிலத்தையும் கொத்தவரங்காய் கொண்டுள்ளது.
குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. இதனால் அதிகம் சமையலில் சேர்க்கப்பட்டு வருகிறது.
ஆத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொத்தவரை நன்கு விளைந்து அறுவடைக்கு வந்துள்ளது. இதனால் காய்களை பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியில் சிறுவிவசாயிகள் அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர். திண்டுக்கல் உழவர் சந்தையில் கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது.
சில்லரை கடைகளில் கிலோ ரூ.70 வரை விற்கப்படுகிறது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மருத்துவ குணம் கொண்ட கொத்தவரங்காய், திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 60 நாள் பயிர், 40 நாட்களில் இருந்து மகசூல் கிடைக்கிறது. நல்ல விலை கிடைப்பதால் இதனை விரும்பி அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றோம் என்றனர்.
