கொடைக்கானலில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் தங்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கடந்த 23ம் தேதி, வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலை முன்னிட்டு தொடர் சூறாவளி பிரசார பயணம் மேற்கொண்ட முதல்வர், சிறிய ஓய்வுக்காக தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கடந்த 25ம் தேதி வருகை வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கு சென்று தங்கினாலும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன்படி கொடைக்கானலில் நேற்று (26ம் தேதி) அதிகாலை நடைப்பயிற்சி செய்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக கொடைக்கானலில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்சர்வேட்டரி அருகே நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் தேக்கத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலையில் காலை 6.45 மணியளவில் முதல்வர் நடைப்பயிற்சியை தொடங்கினார். சுமார் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வாகனத்தில் பிரதான சாலைக்கு வந்த முதல்வருக்கு திமுக தொண்டர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பூங்கொத்து கொடுத்தும், கைகளை குலுக்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் கலந்துரையாடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதிக்கு திரும்பினார்.

 

Related Stories: