திருவாரூர்,ஏப்.23: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிகளில் உரிய ஆவணமில்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 90 ஆயிரத்து 310யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த மாதம் 15ந் தேதி தேர்தல் ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்லப்படும் ரொக்கம் மற்றும் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பரிசுப் பொருட்களை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் மற்றும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிகளிலும் 36 பறக்கும் படையினர் மற்றும் 36 நிலையான கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பா.திருமாளம் அருகே வசந்தகுமார் என்பவர் தலைமையிலான பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் அந்த வழியாக மினிவேன் ஒன்றில் வந்த வாழ்க்கை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நூர்தீன் என்பவர் உரிய ஆவணமில்லாமல் எடுத்த வந்த ரூ.90 ஆயிரத்து 310 பறிமுதல் செய்யப்பட்டு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
