ஜெர்மனி சீக்கியர் கோயிலில் பயங்கர மோதல்: கத்தியால் தாக்கியதில் 11 பேர் காயம்

பெர்லின்: ஜெர்மனியில் உள்ள சீக்கியர் கோயிலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட ரத்தக் களரி மோதலில் 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் மோர்ஸ் நகரில் உள்ள டுயஸ்பர்க் பகுதியில் அமைந்துள்ள சீக்கியர் கோயிலில் நிர்வாகக் குழுவுக்கும், முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையே கோயில் நிதி மற்றும் அதிகாரம் தொடர்பாக நீண்டகாலமாக பிரச்னை நிலவி வந்தது.

இது தொடர்பாக கடந்த காலங்களில் பலமுறை வாக்குவாதங்கள் நடந்து வந்த நிலையில், நேற்று வழிபாட்டு கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பாக, கோயிலுக்குள் இருந்த இரு பிரிவினரிடையே திடீரென கடுமையான மோதல் வெடித்தது. சுமார் 40 பேர் ஈடுபட்ட இந்த மோதலில் துப்பாக்கி, கத்திகள், கிர்பான் எனப்படும் சீக்கியர்களின் குறுவாள்கள் மற்றும் மிளகுப்பொடி ஸ்ப்ரே ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவத்தில் மொத்தம் 11 பேர் காயமடைந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சமீபத்தில் நடந்த புதிய இயக்குநர்கள் குழு தேர்தல் மற்றும் கோயில் நிதியை கையாளுவதில் ஏற்பட்ட மோதலே இந்த ரத்தக் களரிக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார், சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை கைது செய்துள்ளனர். தற்போது அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், கிரிமினல் புலனாய்வுத் துறையினர் இந்த வன்முறை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: