ஐக்கிய நாடுகள்: உலக அமைதி, பாதுகாப்பு, நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்வற்றிற்கான சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக ஆன்டனியோ குட்டெரஸ் பதவி வகிக்கிறார். இவரது 2வது 5 ஆண்டு பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய ஐநா பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டன.
இம்முறை ஐநா பொதுச் செயலாளருக்கான போட்டியில் சிலி முன்னாள் அதிபர் மிச்சேல் பேச்லெட், சர்வதேச அணுசக்தி மையத்தின் தலைவர் அர்ஜென்டினாவின் ரபேல் மரியானோ கிரோஸி, ஐநா வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் கோஸ்டாரிகாவின் ரெபெக்கா கிரின்ஸ்பான், செனகல் நாட்டின் முன்னாள் அதிபர் மாகி சால் ஆகியோர் உள்ளனர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்ற அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் எந்த வேட்பாளரையும் தடுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே அவர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார்.
இந்நிலையில், 4 வேட்பாளர்களிடமும் தலா 3 மணி நேரம் நேர்காணல் செய்யும் கேள்வி-பதில் அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் ஐநாவின் 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் நேர்காணல் செய்வார்கள். முதல் வேட்பாளராக சிலியின் பேச்லெட் இன்று நேர்காணலில் பங்கேற்பார். இதில் சிறப்பாக செயல்படும் நபர்களுக்கு முன்னுரிமை தரப்படும். இதுவரை ஒரு பெண் கூட ஐ.நா தலைமை பொறுப்பை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
