டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று மாலை 4:30 மணியளவில் மிக வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்த பல்வேறு நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் ஏராளமான பொதுமக்கள் கட்டடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் குவிந்தனர். முதலில் ரிக்டர் அளவில் 7.4ஆக இருந்த நிலநடுக்கம் பின்னர் 7.7 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் (JMA), இவாட், அமோரி மற்றும் ஹொக்கைடோ ஆகிய மாகாணங்களில் பசிபிக் கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது முதலில் சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழக்கூடும் என்று கணக்கிடப்பட்ட நிலையில் கடற்கரை மற்றும் நதிக்கரையோரம் வசிக்கும் சுமார் 1 லட்சத்து 72 ஆயிராம் மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்கு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்குக்கு மாறாக சிறிய அளவிலான சுனாமி அலையே பதிவானதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குறிப்பாக இவாட் மாகாணத்திலுள்ள குச்சி துறைமுகத்தில் சுமார் 80 சென்டிமீட்டர் உயரத்திற்கும், ஹொக்கைடோ மற்றும் மியாகி பகுதிகளில் 20 முதல் 40 சென்டிமீட்டர் உயர சுனாமி அலைகள் பதிவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில் தற்போது வரை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜப்பானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமே ஆண்டின் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் சிலியில் 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இதை விட பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
