கொழும்பு: “இலங்கை தமிழர்கள் நலனில் இந்திய அரசும், மக்களும் அக்கறை கொண்டுள்ளனர்” என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம்இலங்கை சென்றார். தொடர்ந்து இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்த சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக மீனவர்கள் பிரச்னை, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
2ம் நாளான நேற்று சி.பி.ராதாகிருஷ்ணன், இலங்கையின் மத்திய தேயிலை தோட்ட மாவட்டமான நுவரெலியாவுக்கு சென்றார். அங்கு ராகலாவில் உள்ள லிடில்ஸ்டேல் தோட்டத்துக்கு சென்ற அவர், இந்திய நிதியுதவியுடன் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டதுடன், அங்குள்ள தமிழர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களிடம், “இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனில் இந்திய அரசும், இந்திய மக்களும் அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் உள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் குடும்பங்களுக்கும், பெருந்தோட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழ் குடும்பங்களுக்கும் இந்திய அரசாங்கம் இதுவரை 50,000 வீடுகளை வழங்கி உள்ளது. இந்திய வீட்டு திட்டத்தில் 4ம் திட்டத்தின்கீழ் கூடுதலாக 10,000 வீடுகள் வழங்கப்படும்” என கூறினார். அத்துடன், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு குறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொண்டார்.
