சரக்கு கப்பலை அமெரிக்கா சிறைபிடித்ததால் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் திட்டமில்லை: ஈரான் அறிவிப்பு; இருதரப்பை சமாதானப்படுத்த பாக். தீவிர முயற்சி

இஸ்லாமாபாத்: ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை சிறைபிடித்ததால், 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எந்த திட்டமும் இல்லை என ஈரான் கூறி உள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வருவதால், இரு தரப்பையும் சமாதானப்படுத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்து வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடந்த முதல்கட்ட இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் 2ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த தனது பிரதிநிதிகளை பாகிஸ்தானுக்கு நேற்று அனுப்பி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலை ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை சிறை பிடித்தது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் போர்க்கப்பல் வழிமறித்து, துப்பாக்கி சூடு நடத்தி கப்பலை செயலிழக்கச் செய்து, அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் கப்பலில் புகுந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தங்களின் முற்றுகையை தாண்டி எச்சரிக்கையை மீறி செல்ல முயன்றதால் ஈரான் சரக்கு கப்பல் சிறைபிடிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

கடந்த 13ம் தேதி அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை தொடங்கிய பிறகு, முதல் முறையாக ஈரான் கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளை என ஈரான் கடுமையாக கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. கப்பல் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நடக்கும் 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எந்த திட்டமும் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி அறிவித்தார். மேலும், ஈரான் மீது பழிசுமத்தும் விளையாட்டை அமெரிக்கா விளையாடி வருவதாகவும், தனது முந்தைய நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா எந்த பாடத்தையும் கற்கவில்லை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இதனால், நாளையுடன் 2 வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையே, இரு தரப்பையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டிருப்பது பேச்சுவார்த்தைக்கு பெரும் தடையாக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அதிபர் டிரம்பிடம் தெரிவித்து உள்ளார். அவரது இந்த ஆலோசனை குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். எனவே, 2 வார போர் நிறுத்தத்தின் கடைசி நாளான இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா அல்லது மீண்டும் மத்திய கிழக்கில் போர் ஏற்படுமா என்பது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

* சீனா கண்டனம்
ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்கா சிறைபிடித்தது கட்டாய இடைமறிப்பு நடவடிக்கை என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயல்படவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கவும் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் வலியுறுத்தி உள்ளார். இதே போல, வளைகுடா பிராந்தியம் மற்றும் உலக பொருளாதாரத்திற்கு எதிர்மறையான விளைவுகளை தவிர்ப்பதற்காக அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடரும் என நம்புவதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

* ஈரானில் 3,300 பேர் பலி
இஸ்ரேல், அமெரிக்காவுடனான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புதிய எண்ணிக்கையை ஈரானின் சட்ட மருத்துவ அமைப்பின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெதி நேற்று வெளியிட்டார். அதன்படி, இப்போரில் 3,375 பேர் பலியானதாகவும், இதில் 2,875 பேர் ஆண்கள், 496 பேர் பெண்கள் என்றும், 383 பேர் 18 வயது மற்றும் அதற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: