சூடானுக்கு ஆயுதங்கள் விற்ற விவகாரம்: அமெரிக்காவில் ஈரான் பெண் தொழிலதிபர் கைது

 

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் வசித்து வந்த ஈரான் பெண் தொழிலதிபர், அந்நாட்டின் உளவு அமைப்புடன் இணைந்து சட்டவிரோதமாக ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஷமிம் மாபி (44), கடந்த 2016ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வந்தார். சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், ஈரான் நாட்டின் உளவுத்துறை மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினருடன் இணைந்து ரகசியமாக ஆயுத இடைத்தரகராகச் செயல்பட்டதாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நடந்த விசாரணையில், ஓமனில் பதிவு செய்யப்பட்ட ‘அட்லஸ் இன்டர்நேஷனல் பிசினஸ்’ என்ற போலி நிறுவனம் மூலமாக, 70 மில்லியன் டாலருக்கும் (சுமார் 580 கோடி ரூபாய்) அதிகமான மதிப்பிலான ஈரானிய தயாரிப்பான ‘மொஹாஜர்-6’ ரக ஆளில்லா போர் விமானங்கள் (ட்ரோன்கள்), குண்டுகள், 55,000 வெடிகுண்டு பியூஸ்கள் மற்றும் பல லட்சம் தோட்டாக்களை உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள சூடான் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, அமெரிக்க அதிகாரிகள் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் ‘ஈரான் அரசு தனது பூர்வீக சொத்துகளை முடக்கியதால், தன்னை கட்டாயப்படுத்தி இந்த வேலையைச் செய்யச் சொன்னது’ என்று ஷமிம் மாபி தெரிவித்துள்ளார். கைதான அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

Related Stories: