ஹாலிவுட் நடிகர் மாரடைப்பால் மரணம்: காதலியின் மகள் உருக்கமான அஞ்சலி

பெவர்லி: பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் முல்டூன் மாரடைப்பால் காலமான சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் பேட்ரிக் முல்டூன், ‘டேஸ் ஆஃப் அவர் லைவ்ஸ்’ என்ற தொடரில் ஆஸ்டின் ரீட் கதாபாத்திரத்திலும், ‘மெல்ரோஸ் பிளேஸ்’ தொடரில் ரிச்சர்ட் ஹார்ட் என்ற வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துப் புகழ்பெற்றார். குறிப்பாக 1997ம் ஆண்டு வெளியான ‘ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ்’ திரைப்படத்தில் ஜாண்டர் பார்கலோவாக நடித்ததன் மூலம் உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்தார்.

நடிகை டென்னிஸ் ரிச்சர்ட்ஸுடன் 1990ம் ஆண்டுகளின் இறுதியில் காதலில் இருந்த இவர், அதன் பின் அவருடன் மிக நெருக்கமான நண்பராகத் தொடர்ந்து வந்தார். டென்னிஸ் ரிச்சர்ட்ஸின் மகள் லோலா ஷீன் இவரைத் தனது குடும்பத்தில் ஒருவராகவும், தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் ஒரு தந்தையாகவும் கருதி வந்தார். இந்நிலையில் 57 வயதுடைய பேட்ரிக் முல்டூன், நேற்று பெவர்லி ஹில்ஸில் உள்ள தனது வீட்டில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.

டென்னிஸ் ரிச்சர்ட்ஸுடன் இணைந்து அவர் நடித்த ‘டர்ட்டி ஹேண்ட்ஸ்’ என்ற த்ரில்லர் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாக இருந்த நிலையில், இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் உருக்கமான அஞ்சலியைப் பகிர்ந்துள்ள லோலா ஷீன், ‘என்னுடைய அம்மாவின் மிகச்சிறந்த நண்பராகவும் தூணாகவும் நீங்கள் இருந்தீர்கள். குழந்தைப் பருவத்தில் இருந்தே என்னை எப்போதும் பாதுகாத்து வந்ததற்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். இவரது மறைவு ஹாலிவுட் ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்களிடையே ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

Related Stories: