கைக்குழந்தைகளின் சிகிச்சை கருவியுடன் பிரபல பாடகியின் சொகுசு கார் திருட்டு: துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்

 

லண்டன்: லிட்டில் மிக்ஸ் இசைக்குழுவின் முன்னாள் பாடகி ஜெசி நெல்சனின் கார் திருடு போன நிலையில் குழந்தைகளுக்கான மருத்துவ கருவியை மீட்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல லிட்டில் மிக்ஸ் இசைக்குழுவின் முன்னாள் பாடகி ஜெசி நெல்சன், தண்டுவட தசை சிதைவு நோய் பாதித்த தனது இரட்டை பெண் குழந்தைகளுக்காக மருத்துவ விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், எசெக்ஸ் மாகாணத்தின் பிரெண்ட்வுட் பகுதியில் உள்ள ஜெசி நெல்சனின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிளாக் லேண்ட் ரோவர் டிபெண்டர் ரக கார் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்களால் திருடப்பட்டது.

இந்த கார் கடைசியாக செம்ஸ்போர்டு பகுதியில் சென்றது கேமராக்களில் பதிவாகியுள்ளது. காரினுள் ஓஷன் ஜேட் மற்றும் ஸ்டோரி மன்ரோ என்ற அவரது (11 மாதம்) இரட்டை பெண் குழந்தைகளின் தினசரி சிகிச்சைக்கு தேவையான மிக முக்கியமான மருத்துவ உபகரணங்கள் இருந்துள்ளன. தண்டுவட தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த கருவிகள் சுவாசிக்கவும் நகரவும் மிகவும் அத்தியாவசியமானவை என்பதால், ‘எனது காரை மீட்டு தருபவர்களுக்கு 10,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம் ரூபாய்) சன்மானம் வழங்கப்படும்’ என்று ஜெசி நெல்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் எசெக்ஸ் போலீசார் அல்லது சமூக வலைதளம் வாயிலாக தன்னை தொடர்பு கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: