*சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் பரவும் அபாயம்
களக்காடு : களக்காட்டில் செடி-கொடிகள் அடர்ந்து புதர் மண்டி கிடக்கும் தெப்பக்குளத்தில் குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதார கேடு நிலவுகிறது.களக்காடு கோவில்பத்தில் துர்க்கையம்மன் கோயில் அருகே, சேரன்மகாதேவி-பணகுடி பிரதான சாலையையொட்டி தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு நாங்குநேரியான் கால்வாயில் இருந்து வரும் தனி கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கோவில்பத்து மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக திகழும் இந்த தெப்பக்குளத்தின் நடுவே நீராழி மண்டபமும் உள்ளது. தெப்பக்குளத்தில் இறங்க ஏதுவாக நான்கு புறங்களிலும் படித்துறைகளும் உள்ளன. முன் காலத்தில் கோவில்பத்து பகுதி பொதுமக்கள் இந்த குளத்தில் தான் குளித்து வந்துள்ளனர்.
சமையல் உள்ளிட்ட தேவைகளுக்கும் நீர் எடுத்துள்ளனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள துர்க்கையம்மன், விநாயகர், கிருஷ்ணர் கோயில்களில் சாமிகளுக்கு அபிஷேகம் செய்யவும் இந்த தண்ணீரை தான் பயன் படுத்தியுள்ளனர். தண்ணீரும் சுத்தமாகவே இருந்ததாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் தெப்பத் திருவிழாவும் நடந்து வந்ததாக ஊர் பெரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் காலப்போக்கில் தெப்பக்குளம் தூர்வாரப்படாமல், பராமரிப்பின்றி தூர்ந்து போனது. தெப்பக்குளத்தின் படித்துறைகளில் செடிகள் முளைத்துள்ளன.
படித்துறைகளும் இடிந்து தகர்ந்து கிடக்கிறது. தெப்பக்குளத்தில் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த தெப்பக்குளத்தில் குப்பைகளும் கொட்டப்படுகின்றன.
இதனால் குளத்தின் தண்ணீர் மாசுபட்டுள்ளது. குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடும் நிலவுகிறது. அத்துடன் குளத்தில் உள்ள புதர்களில் தஞ்சமடைந்துள்ள பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் சாலைகளிலும், குடியிருப்பு பகுதியிலும் அவ்வவ்போது உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே புதர் மண்டிய குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இயற்கை நல ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஒரு காலத்தில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை முழுவதுமாக தீர்த்து வைத்த தெப்பக்குளம் இன்று புதர் மண்டி, குப்பைகள் சங்கமிக்கும் இடமாக மாறி நோய்களை பரவும் மையமாக மாறியுள்ளது கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது.
அறிவியல் முன்னேற்றம் எதுவும் இல்லாத அந்த காலத்தில் நமது முன்னோர்கள் ஊர், ஊராக குளங்களை வெட்டி நீராதாரத்திற்கு வழிவகுத்தனர். ஆனால் அறிவியல் யுகமாக மாறி விட்ட இந்த காலத்தில் முன்னோர்கள் ஏற்படுத்திய நீர்நிலைகளை அழிய விட்டு வருகிறோம்” என்றனர்.
