வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்ற உயர்ந்த ஆன்மீகக் கோட்பாட்டை உலகிற்கு அறிவித்தவர் வள்ளலார். அவர் தோற்றுவித்த சத்ய ஞான சபையில் மாத பூச வழிபாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், தைப்பூசத் திருநாளன்று லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள். வள்ளலார் அவர்கள் தைப்பூசத் திருநாளில் முக்தியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உ உணர்த்தும் வகையிலேயே தைப்பூசத் திருநாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. தைப்புசத் திருநாளன்று உலகம் முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வருகை தந்து அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்க தன்னெழுச்சியாகக் கூடுவார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதைக் கண்டு, வள்ளலாரின் பொதுமை நோக்கத்தின் மீது அளவு கடந்த பற்றுகொண்ட வடலூர் பார்வதிபுரம் பகுதி மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்த நிலம்தான் 100 ஏக்கர் வடலூர் பெருவெளியாகும். இவ்வளவு பெரிய நிலம் இருப்பதால்தான் தைப்பபூசத்தன்று வடலூரில் கூடும் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி அருட்பெருஞ் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பிச் செல்கின்றனர். மண் ஆசை சிறிதும் இல்லாத வள்ளலார், சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் நிலப் பரப்பை சாதாரண ஏழை, எளிய மக்களிடமிருந்து பெற்றதற்குக் காரணம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தனி நெறியை வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் மட்டுமல்ல, தனிப்பெரும் கருணை கொண்ட அருட்பெரும் ஜோதி ஆண்டவரை, தைப்புசத் திருநாளன்று வருகை தரும் அனைத்து பக்தர்களும் சிரமமின்றி ஒன்றுகூட பெரும் நிலப் பரப்பு வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே அந்நிலம் தானமாகப் பெறப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளுக்கு முந்தைய நாளே ஜோதி வழிபாட்டிற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூர் பெருவெளியில் குவியத் தொடங்குவார்கள். தைப்பூசத் திருநாளில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் ஜோதி வழிப்பாட்டிற்காக கூடுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அடுத்த நாள் அதிகாலை, 6-வது ‘ஜோதி வழிப்பாட்டின்’ போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். அதற்கு அடுத்த நாள் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் ‘திரு அறைக் காட்சி நாள்’ என்பதால், மேலும் பல லட்சம் பக்தர்கள் ‘திரு அறை தரிசனம்’ காண கூடுவார்கள். இப்படி வருடத்தில் 4 முக்கிய நாட்களும் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது, பிற மாவட்டங்கள், வெளி மாநிலம், வெளிநாடு என்று சன்மார்க்க அன்பர்கள் லட்சக்கணக்கில் ஒன்று கூடும் இடமாக வடலூர் பெருவெளி உள்ளது. இப்படி, விழாக் காலங்களில் கூடும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இப்படி லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் வடலூர் பெருவெளியில், சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தி ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ கட்டுவதற்கு இந்த அரசு முனைந்துள்ளது அறிந்து இப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ அரசு கட்டுவதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் வடலூர் பெருவெளியில் இம்மையத்தை கட்டுவதால், ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள். இப்படி, இப்பெருவெளி நிலத்தை கையகப்படுத்தினால் ‘மாத பூச வழிபாடும், தைப்பூச சிறப்பு வழிபாடும்’ தடைபடும். இதனால் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: