அரியலூர் ஜிஹெச் ரத்த மையத்தில் 2023ம் ஆண்டு 3,846 யூனிட் ரத்தம் சேகரிப்பு

*ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கலெக்டர் தகவல்

அரியலூர் : அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்தாண்டு 3,846 யூனிட்ஸ் ரத்தம் சேகரிக்கப்பட்டு 7,000 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இரத்த மையம் மற்றும் ரத்ததான முகாமில் உயிர்காக்கும் பொருட்டு தன்னார்வமாக ரத்த தானம் செய்த நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பதக்கங்களையும் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எஸ்பி செல்வராஜ் கலந்து கொண்டார்.

உயிர் காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வ குருதிக் கொடையாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், தேவையில் இருக்கும் நோயாளிகளுக்கு தரமான பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தம் சார் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து ரத்ததானம் அளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் நாள் உலக குருதி கொடையாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 2023 – மார்ச் 2024ல் ரத்த மையம் மற்றும் ரத்ததான முகாமில் உயிர்காக்கும் பொருட்டு தன்னார்வமாக ரத்த தானம் செய்த 24 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு கேடயங்களை வழங்கினார்.

மேலும், உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்ற அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 6 மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு கேடயத்தினையும் வழங்கினார். முன்னதாக தன்னார்வ ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கவும், ரத்த தட்டுப்பாட்டை குறைக்கவும் ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆண்டின் உலக குருதி கொடையாளர் தினத்தின் கருப்பொருளாக “இரத்த நன்கொடையின் 20ம் ஆண்டு கொண்டாட்டம், ரத்த கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள் என்ற பொருளை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது. அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த மையத்தில் கடந்த ஆண்டு 3846 யூனிட்ஸ் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.

அதனைக் கொண்டு 7000 மேற்பட்ட ரத்தம் மற்றும் இரத்த கூறுகள் மருத்துவமனை உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள், எலும்பு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், அவசர மற்றும் விபத்து பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அஜித்தா, மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, அவசர சிகிச்சை தலைமை மருத்துவ அலுவலர் கண்மணி, துணை நிலைய மருத்துவ அலுவலர்கள் அறிவுச்செல்வன், ஜெயசுதா, துறை தலைவர் குருதியேற்றுத்துறை சகுந்தலா, குருதி வங்கி மருத்துவ அலுவலர் சந்திரசேகரன், மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குருதி வங்கி செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புநர்கள், தன்னார்வ குருதி கொடையாளர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

The post அரியலூர் ஜிஹெச் ரத்த மையத்தில் 2023ம் ஆண்டு 3,846 யூனிட் ரத்தம் சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: