நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பட்டா கோரிய நிலுவை மனுக்கள் ஏதேனும் உள்ளதா, தாங்கள் பணியாற்றக்கூடிய பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் எவ்வளவு உள்ளன, இவற்றின் உட்புலன்கள் குறித்தும், சாலை, நீர்பாதைகள் ஆகியவை குறித்தும், விரிவான புகைப்பட வரைபடத்தை தயார்படுத்தப்பட வேண்டும், இப்பணிகள் மேற்கொள்ளும் போது, அந்தந்த பகுதிகளில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான நிலங்கள் எளிதாக கண்டறியலாம். மொத்தமாக உள்ள நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்து, உடனடியாக இப்பணியை மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து, மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாணவர்களின் வருகை பதிவேடுகளையும், பள்ளியில் பணியாற்றக் கூடிய ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆர்பிஎஸ்கே வாயிலாக மாணவர்களுக்கு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அப்படிமேற்கொள்ளப்பட்டதில் இப்பள்ளி மாணவர்கள் எத்தனை மாணவர்களுக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தொடர் சிகிச்சைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என ஆவணங்களை சரிபார்த்து, அப்பள்ளியில் மதியஉணவிற்காக சமைக்கப்பட்டுள்ள உணவினை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இப்பள்ளிக்கு புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் எண்ணும், எழுத்தும் கல்வி திட்டத்தின் மூலம் கட்டிட உட்பிரிவில் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு வகையான தமிழ், அறிவியல், கணிதம் ஆகிய கற்றலுக்கான வரைபடங்கள் வரைவதை பார்வையிட்டு கூடிய விரைவில் இக்கட்டிடம் மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்படஉள்ளதாக தெரிவித்து, அப்பகுதியில் பழைய பள்ளி கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் வருகை, தொடர்ந்து பதிவேடுகளையும், மருந்துகள் இருப்பு குறித்த பதிவேடுகளையும், தற்போதுள்ள நிலையில் எத்தனை நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள் என்ற நிலையையும் பார்வையிட்டார். வயிற்றுப்போக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை மேற்கொள்ள வருபவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் விவரங்கள் குறித்து, வட்டத்துக்கு உட்பட்ட அலுவலரைக்கொண்ட சிகிச்சை குழு உருவாக்கி, இக்குழுவில் இத்தகவலினை தெரிவிப்பதன் மூலம் உடனடியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் குடிநீர் மூலம் உருவான தொற்றா, கொசுக்களால் ஏற்பட்ட தொற்றா என்பதை ஆராய்வதற்கும், உடனடியாக அப்பகுதி மக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கும், மேலும், சமுதாய விழிப்புணர்வு மற்றும் சிறார் குற்ற நடவடிக்கைகள் கண்டறிவதற்கும் இச்செயல்பாடுகளின் வாயிலாக ஒருங்கிணைந்து பணியாற்றி நோயில்லா நிலைபாட்டை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இம்மருத்துவமனையில் நாள்தோறும் நோய்களுக்கான சிகிச்சை மேற்கொண்டதற்கான விவரம் மற்றும் மாத இறுதியில் எந்தெந்த வகையான சிகிச்சை அட்டவணை தகவல்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இதன்மூலம் மாத அடிப்படையில், எந்தெந்த மாதத்தில் என்னென்ன விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரம் அறிவதற்கும், இதற்கேற்றார்போல், வரும் காலங்களில் இவ்வட்டவணை கணக்கின்படி நோய்களுக்கான மருந்துகள் இருப்பும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான தகவல்களை அறிவதற்கும் இவ்வட்டணை விவரங்கள் உதவும் என்று கலெக்டர் க.தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

The post நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: