தேவதானப்பட்டி பகுதியில் தென்னை சாகுபடியை அதிகரிக்க வேளாண்துறை நடவடிக்கை தேவை

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பகுதியில் தென்னை சாகுபடியினை அதிகரிக்க வேளாண்மைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, காமக்காபட்டி, ஜி.கல்லுப்பட்டி, கோட்டார்பட்டி, ஸ்ரீராமபுரம், செங்குளத்துப்பட்டி, சாத்தாகோவில்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, மஞ்சளாறு அணை கிராமம், காமாட்சியம்மன் கோவில் பகுதி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, வைகைபுதூர், ஜெயமங்கலம், மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, சில்வார்பட்டி, தர்மலிங்கபுரம், வேல்நகர் உள்ளிட்ட இடங்களில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.

பொதுவாக தென்னை சாகுபடியினை பொறுத்தவரை தண்ணீர் அதிகம் தேவைப்படும். அதனால் தென்னை விவசாயம் என்பது கண்மாய்கள் அருகே, ஆற்றுப்படுகைகள், நீர்வரத்து வாய்க்கால்கள், ஓடைகள், புஞ்சை நிலங்களில் பள்ளமான பகுதிகள் என தண்ணீர் பாங்கான இடங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் தண்ணீர் அதிகம் உள்ள புஞ்சை வயல்களில் தென்னை சாகுபடி செய்ய ஏற்பதல்ல. அதனால் நீர்வரத்து, நிலத்தடி அதிகம் உள்ள இடங்களில் புஞ்சை நிலங்கள், தண்ணீர் அதிகம் உள்ள மானாவாரி நிலங்களில் அதிகம் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி இருந்தது. கடந்த 2012-13ம் வருடம் இந்த பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இந்த வறட்சி காலங்களில் பெரும்பாலான தென்னை மரங்கள் காய்ந்தன. இதனால் தேவதானப்பட்டி பகுதியில் தென்னை சாகுபடி அழியும் நிலைக்கு சென்றது. சாகுபடி செய்த தென்னை மரங்கள் 20 வயதில் உள்ள மரங்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வறட்சி ஏற்பட்டு பின்னர் தண்ணீர் தன்னிறைவு பெற்றால் மீண்டும் அந்த தென்னை மரத்தை காய்க்கவைப்பது பெரும் சவாலாக இருக்கும்.

அதனால் தென்னை சாகுபடியினை பொறுத்தவரை தொடர்சீரான நீர்பாசனம் தேவை. தேவதானப்பட்டி பகுதியில் 2012-13ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியில் கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, காமக்காபட்டி, மஞ்சளாறு அணை கிராமம், காமாட்சியம்மன்கோவில் பகுதி ஆகிய இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு, வறட்சியால் பல ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலை ஏற்பட்டது.

இது தவிர சாலை ஓரங்கள், வண்டிப்பாதைகள் ஓரங்களில் உள்ள தென்னை மரங்கள் வீட்டடி பிளாட்டுகளுக்காக வெட்டப்பட்டு வருகிறது. மேலும் தென்னை சாகுபடியில் தேங்காய் விலை என்பது ஒரு நிரந்தமில்லாமல் உள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு தேங்காய் விலை ரூ.10வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் வாங்குகின்றனர். இது தவிர ஒரு சில தென்னை விவசாயிகள் தாங்களே தேங்காயை பறித்து கொப்பறை தேங்காய்க்கு பயன்படுத்துகின்றனர்.தண்ணீர் பற்றாக்குறை, விலை குறைவு, தென்னை மரத்தில் நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் தென்னை சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது. மீண்டும் தேவதானப்பட்டி பகுதியில் தென்னை சாகுபடியினை அதிகரிக்கவும் தென்னை சாகுபடி விவசாயகளை பொருளாதார ரீதியாக உயர்த்தவும் வேளாண்மைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கவேண்டும். தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு அதிக மானிய விலையில் உரங்கள், நிலத்தில் உழவு செய்ய மினி டிராக்டர், மற்ற இதர இடுபொருட்களையும் வழங்கவேண்டும். விளைநிலங்களில் புதிததாக தென்னை சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

தென்னை சாகுபடி செய்ய ஆர்வமாக உள்ள விவாசயிகளை வேளாண்மை அலுவலர்கள் சந்தித்து, அதிகம் லாபம் தரக்கூடிய தென்னை நாற்றுகளை மானிய விலையில் வழங்கி, அதற்கு நடவு, பராமரிப்பு, உரம், மருந்து தெளிப்பு உள்ளிட்டவைகள் வழங்கவேண்டும். இதனால் தேவதானப்பட்டி பகுதியில் மீண்டும் தென்னை சாகுபடி புத்துயிர் பெற வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post தேவதானப்பட்டி பகுதியில் தென்னை சாகுபடியை அதிகரிக்க வேளாண்துறை நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Related Stories: