புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சரக்கு வாகன டிரைவர்கள்

*ஆணையரை சந்தித்து முறையிட்டனர்

புதுச்சேரி : புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.31 கோடியில் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் ஏஎப்டி திடலில் தற்காலிகமாக பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதற்கிடையே புதுச்சேரி- கடலூர் சாலையில் தொழிலாளர் சிலை எதிரே மினி லோடு கேரியர் வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகின்றனர். பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, அங்கு மினி லோடு கேரியர் வாகனங்களை நிறுத்த புதுச்சேரி நகராட்சி தடை விதித்துள்ளது. தற்காலிகமாக, மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்திற்கு சென்று தொழில் செய்யுமாறு மினி சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

இதனை அறிந்த சிஐடியு மினி லோடு கேரியர் ஓட்டுநர் சங்க தலைவர் அந்தோணி தாஸ், சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன் மற்றும் மினி லோடு கேரியர் வாகன ஓட்டுநர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிட கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை திரண்டனர். ஆனால், அங்கு ஆணையர் இல்லாததால் அவரை பார்த்து முறையிட காத்திருந்தனர். மதியம் 1 மணியளவில் ஆணையர் கந்தசாமி வந்ததையடுத்து அவரை சந்தித்து நிர்வாகிகள் பேசினர்.

`40 ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் சாலையில் உழைப்பாளி சிலை அருகே மினி லோடு கேரியர் வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம். ஏஎப்டி தற்காலிக பேருந்து நிலையத்துக்கு எங்களால் எந்த பாதிப்பும் இல்லை. மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்துக்கு சென்றால் எங்களது தொழில் பாதிக்கப்படும். தொடர்ந்து, இங்கேயே தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். நீங்களே இங்கு வந்து இதை ஆய்வு செய்து கொள்ளுங்கள்’ என்றனர்.

இதையடுத்து மாலை 5 மணியளவில் ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள், அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், ஆணையர் கந்தசாமி, இங்கு 20 வண்டிகளை மட்டும் நிறுத்திக் கொள்ள அனுமதி. மீதமுள்ள வாகனங்களை வேறு எங்காவது நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தலா ரூ.200 மாதந்தோறும் நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும் என சங்க நிர்வாகிகளிடம் கூறினார். இதனை சங்கத்தினர் ஏற்றுக் கொண்டனர்.

The post புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சரக்கு வாகன டிரைவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: