மணிப்பூர் கலவரத்தின் உண்மையான நிலைமையை ஒன்றிய அரசு மறைக்கிறது: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு உன்மை நிலையை மறைத்து கூறுகிறது என உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளுடன் கூடிய காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது. மணிப்பூர் வன்முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,”மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது ஐந்து மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

இதையடுத்து ஒன்றிய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதத்தில்,” மணிப்பூர் மாநிலத்தில் தற்போது வரையில் அசாதாரண நிலைமை தான் நீடித்து வருகிறது. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. குறிப்பாக ஒருநாள் முன்பு கூட இரவில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அங்கு இரு பிரிவினர்களின் சண்டை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நடக்கும் உன்மை நிலை அனைத்தையும் ஒன்றிய அரசு மறைத்து கூறுகிறது.

குறிப்பாக மெய்டீஸ் இனக்குழுவை தாக்கி வரும் குக்கி இனத்தவர்களில் ஆயுதம் தாங்கிய நபர்களுடைய துல்லியமான எண்ணிக்கையை கணக்கிட வேண்டும். மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற குற்றச்சாட்டுகளுடன் கூடிய காரசார வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,” இந்த வழக்கில் தற்போதைக்கு நிலவர அறிக்கை என்பது தேவைப்படுகிறது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் தங்களால் தொடர்ந்து விசாரணை நடத்த முடியும். எனவே சட்டம் ஒழுங்கு விவகாரம், எவ்வளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிலைமையை சீராக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன, நிவாரண முகாம்கள் எந்த அளவிற்கு செயல்படுகிறது உள்ளிட்ட முழு தகவல்களும் அடங்கிய புதிய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

* மணிப்பூரில் நாளை பள்ளிகள் திறப்பு
மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட பிறகு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் நாளை ஜூனியர் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகளை பாதுகாக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

The post மணிப்பூர் கலவரத்தின் உண்மையான நிலைமையை ஒன்றிய அரசு மறைக்கிறது: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் appeared first on Dinakaran.

Related Stories: