திருப்பதி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு

*லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர்

*நான்கு மாட வீதியில் வீதிஉலா கோலாகலமாக நடந்தது

திருமலை : திருப்பதி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரமோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர். நான்கு மாட வீதியில் சுவாமியின் வீதிஉலா கோலாகலமாக நடந்தது.

திருப்பதி அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பிரமோற்சவத்திற்கு அனைத்து தெய்வங்களையும் அழைக்கும் விதமாக மிதுன லக்னத்தில் வைகானச ஆகம முறைப்படி வேத பண்டிதர்களின் வேத முழக்கங்கள், மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்களின் கோவிந்த முழக்கத்திற்கு மத்தியில் கங்கணப்பட்டர் சூர்யகுமார் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

அன்று முதல் தொடர்ந்து பெரிய சேஷம், சின்னசேஷம், அன்னம், முத்துபந்தல், சிங்கம், சர்வ பூபாலம், மோகினி அலங்காரம், கருட, அனுமந்த, கஜ, சூர்ய, சந்திர பிரபை, குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுவாமியின் வீதி உலாவின்போது பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து வந்தனர். ஏராளமான பெண்கள் கோலாட்டம், பஜனை, குச்சுபிடி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வீதிஉலாவை களைக்கட்டியது.

பிரமோற்சவத்தில் எட்டாம் நாளான நேற்று அதிகாலை பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமிக்கு பால், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புனித தீர்த்தம் ஊற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து காலை அலங்கரிகப்பட்ட தேரில் தேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மங்கள வாத்தியங்கள், பஜனைகள், கோலாட்டம் ஆகியவற்றுக்கு மத்தியில் கோயில் வீதிகளில் தேரை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் படி பக்தி முழக்கமிட்டு வடம் பிடித்து செல்ல வலம் வந்தார். அதன்பின் பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் உற்சவர்களுக்கு அபிஷேகம் நடந்தது.மாலை ஊஞ்சல்சேவையும் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான நேற்று காலை தெப்பக்குளத்தில் உற்சவமூர்த்திகளுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் திருமஞ்சனம் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை திரளான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தெப்பகுளத்தில் புனிதநீராடினர். மாலை நான்கு மாடவீதியில் வீதி உலா நடைபெற்றது. அப்போத வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து பிரம்மோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது. கடைசிநாள் பிரமோற்சவம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தெப்ப குளத்தில் புனிதநீராடி, புனித தீர்த்தத்தை எடுத்துச்சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஏஇஓ ரமேஷ், கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி, கங்கண பட்டர் சூர்ய குமார் , கோயில் ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post திருப்பதி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: