ஓராண்டில் திருமணத்துக்காக ரூ.10.8 லட்சம் கோடி செலவிட்ட இந்தியர்கள்.. நாட்டின் தனிநபர் வருமானத்தை விட திருமணத்திற்கு 5 மடங்கு செலவு!!

டெல்லி இந்தியாவில் திருமணங்களுக்காக மட்டும் ஓராண்டில் ரூ.10.84 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்தில் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் சராசரியாக திருமணங்களுக்கு ரூ.12.5 லட்சம் செலவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தனி நபர் வருமானம் ரூ. 2.40 லட்சம் ஆக உள்ள நிலையில், அதனை விட 5 மடங்கு அதிகமாக இந்தியர்கள் திருமணங்களுக்கு செலவிடுகின்றனர். இந்திய திருமணங்களுக்கான செலவுகளில் தங்க நகைகளுக்காக மட்டும் 25% ஒதுக்கப்படுகின்றன. ஆபரண சந்தையில் சுமார் 50% நகைகள் திருமணங்களுக்காகவே விற்பனை ஆகின்றன.

இந்தியர்கள் திருமணத்திற்காக நகைகள் வாங்க மட்டும் ஆண்டுக்கு ரூ. 3.33 லட்சம் கோடியை செலவு செய்கின்றனர். நகைக்கு அடுத்தபடியாக திருமண விழாக்களில் உணவுக்காக ரூ. 2.16 லட்சம் கோடி சராசரியாக செலவிடப்படுகிறது. திருமணத்திற்காக முந்தைய கொண்டாட்டம், நலங்கு, மெகந்தி, வரவேற்பு உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு ரூ.1.66 லட்சம் கோடியும் புகைப்படத்திற்காக ரூ.1 லட்சம் கோடியும் இந்தியர்கள் செலவு செய்கின்றனர். இந்தியாவில் விற்பனையாகும் ஆடைகளில் 10% திருமணங்களுக்காகவே வாங்கப்படுகிறது. இதற்காக இந்தியர்கள் ரூ.83,000 கோடியை செலவு செய்கின்றனர்.

இந்தியாவில் உணவு, மளிகைப் பொருட்களுக்கு அடுத்ததாக திருமணங்களுக்கான வர்த்தகம் மட்டுமே ஓராண்டில் ரூ.10.80 லட்சம் கோடிக்கு நடந்துள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் முதல் 1 கோடி வரை திருமணங்கள் நடக்கின்றன. சீனாவில் 70 முதல் 80 லட்சம் திருமணங்களும் அமெரிக்காவில் 20 முதல் 25 லட்சம் திருமணங்களும் நடைபெறுகின்றன. ஆனால் திருமண வர்த்தகத்தை பொறுத்தவரை சீனாவே முதலிடத்தில் உள்ளது. சீனாவில் ஓராண்டில் திருமணத்திற்காக மட்டும் நடக்கும் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.14.18 லட்சம் கோடியாகவும் இந்தியாவில் ரூ.10.84 லட்சம் கோடியாகவும் உள்ளது. அமெரிக்காவில் திருமணத்திற்கான வர்த்தகம் ரூ.5.84 லட்சம் கோடியாக உள்ளது. உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத வகையில், குழந்தைகளின் படிப்பு செலவை விட 2 மடங்கு அதிகமாக திருமணங்களுக்கு செலவு செய்வது இந்தியர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஓராண்டில் திருமணத்துக்காக ரூ.10.8 லட்சம் கோடி செலவிட்ட இந்தியர்கள்.. நாட்டின் தனிநபர் வருமானத்தை விட திருமணத்திற்கு 5 மடங்கு செலவு!! appeared first on Dinakaran.

Related Stories: