48 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்.. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு : பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!!

டெல்லி : 18ஆவது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் ஒருமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை சபாநாயகராக தேர்வானவர் பெருமையை பெற்றார் ஓம் பிர்லா. ராஜஸ்தானின் கோட்டா தொகுதியாக இருந்து 3வது முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் ஓம் பிர்லா ஆவார். 18வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கூடிய நிலையில், முதல் 2 நாட்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவியேற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டியது மரபு.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வரலாற்றில் 1976க்கு பிறகு முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் முன்னாள் சபாநாயகருமான ஓம் பிர்லாவை எதிர்த்து 8 முறை எம்பியான காங்கிரசின் கே.சுரேஷ் போட்டியிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான ஓம் பிர்லா பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார்; ராஜ்நாத் சிங், லல்லன் சிங் ஆகியோர் வழிமொழிந்தனர்.

காங்கிரஸ் வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷை கேரளாவை சேர்ந்த புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் பிரேமச்சந்திரன் முன்மொழிந்தார். கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். இதையடுத்து, பிரதமர் மோடி முன்மொழிந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக இடைக்கால சபாநாயகர் அறிவித்தார். இதில், மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள், ஒம்பிர்லாவை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமருடன் இணைந்து சபாநாயகரை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றார். பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post 48 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்.. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு : பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: