உளுந்தூர்பேட்டையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பதில் தாமதம்: 200 டன் நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காணையார் கிராமத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தினந்தோறும் அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5000 நெல் மூட்டைகள் வரத்து வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மற்றும் வாகன நெரிசல் கட்டுப்படுத்த 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உளுந்தூர் பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்களை வாங்கி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

மேலும் காணையார் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆயிரம் மூட்டைகள் 2 ஆயிரம் மூட்டைகள் என நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இது வரை திறக்கப்படவில்லை. இதனால் காணையாறு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல்லை காணையார் கிராமத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் 200 டன் அளவிற்கு நெல்களை கொண்டுவந்து வைத்துள்ளனர்.

இதனால் அருகில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து காட்டு பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் நெற்பயிர்களை சேதம் ஏற்படும் நிலை உள்ளதால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து காணையார் கிராமத்தில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post உளுந்தூர்பேட்டையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பதில் தாமதம்: 200 டன் நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: