சுற்றுலா திட்டப்பணிகளை டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தல்

சென்னை: அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை, வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் மணிவாசன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: சுற்றுலா தலங்களில் வளர்ச்சித்திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது வாகன நிறுத்தும் இடம், சுகாதார வளாகம் அமைத்தல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா முகாம்கள் நடத்துபவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் வீடுகளிலேயே தங்கும் வசதி மற்றும் உணவு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்கி வரும் சுற்றுலா செயல்பாட்டாளர்களை சுற்றுலாத்துறையில் பதிவு செய்ய அறிவுறுத்தி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சுற்றுலா திட்டப்பணிகளை டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: