ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல்

சென்னை: ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கடி கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

கூட்ட நெரிசலில் சிக்கிப் படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மக்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சையில் உள்ளவர்கள் மிக விரைவாகக் குணமடைய வேண்டுகிறேன்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க உத்திர பிரதேச சுகாதாரத்துறை ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டது என்றே தெரிகிறது. காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் டிரக்குகள், டெம்போக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சை மையத்திற்குக் கொண்டு வரப்பட்ட காணொலிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.

சுமார் 1.15 லட்சம் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு உரியப் பாதுகாப்பு முயற்சிகளை மாநிலஅரசு செய்யத் தவறிவிட்டது என்பது கவலைக்குரியது. எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் எங்கும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு முயற்சிகளை மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

The post ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: