திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு: புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்

திருமலை: வைகுண்ட ஏகாதசியொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 23ம்தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏகாதசியொட்டி 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்து வைத்து பக்தர்கள் தரிசிக்க அனுமதிப்பது வழக்கம். ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவதால் அனைவராலும் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 23ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் நாளை இரவுடன் நிறைவுபெறுகிறது. இதற்காக ஏற்கனவே சுமார் 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

அதிகாலை முதல் கடும் பனிப்ெபாழிவையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று தரிசித்து வருகின்றனர். கடைசி நாளான நாளை இரவு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் கதவுகள் அடைக்கப்படுகிறது. முன்னதாக நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் 100 பாசுரங்கள் பாடப்படும். அதன்பிறகு வாயில் அடைக்கப்படும். இந்நிலையில் நாளை ஆங்கில புத்தாண்டு என்பதால் இன்று காலை முதல் பக்தர்கள் வருகை திருமலைக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே நாளை ஏழுமலையானை தரிசனம் செய்ய இயலும் என்றாலும், இதர பக்தர்கள் திருமலைக்கு வந்து மற்ற சன்னதிகளுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். நாளை மறுதினம் முதல் இலவச தரிசன டிக்கெட் மூலம் சுவாமியை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரூ.3.70 கோடி காணிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரேநாளில் 63,728 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 19,206 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.3.70 கோடி கிடைத்தது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு: புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: