மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பது குறித்த சுற்றுச்சூழல் அறிக்கையை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்தது தமிழ்நாடு பொதுப்பணித்துறை

டெல்லி: சென்னை மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பது குறித்த சுற்றுச்சூழல் அறிக்கையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்தது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. அதற்கான திட்டப் பணிகள் நடக்கின்றது. அது தொடர்பாக வல்லுநர் குழு பரிந்துரைகளும் செய்துள்ளது. மெரினா கடலில் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்குவது குறித்து விரைவில் ஒன்றிய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு முடிவெடுக்க உள்ளது. அதன் தொடர்ச்சியாக மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்கு நடுவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடந்த மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு முடிவுகளை சுட்டிக் காட்டி, தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் இருந்து குறிப்பிட்ட மீட்டர் தூரத்தில் கடலுக்குள் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் தொடர்பான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை தமிழக அரசு தயாரிக்க வேண்டும். அதற்கான அனுமதியை ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் வல்லுநர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. அந்த அனுமதியில், தமிழக அரசின் பொதுப் பணித்துறை சமீபத்தில் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. தமிழக அரசின் அனுமதி கோரிய வேண்டுகோளை ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் துறை பரிசீலித்து, பொதுமக்கள் கருத்துகேட்க வேண்டும். அதே நேரத்தில் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் தயாரிக்க வேண்டும்.

ஒன்றிய அரசு வகுத்தளித்துள்ள நிபந்தனைகளையும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையையும் நான்கு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு எழுதியுள்ள கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளது. மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் கோரி ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில்; சென்னை மெரினாவில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய ஒப்புதலை அடுத்து ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கபப்ட்டுள்ளது.

The post மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பது குறித்த சுற்றுச்சூழல் அறிக்கையை ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்தது தமிழ்நாடு பொதுப்பணித்துறை appeared first on Dinakaran.

Related Stories: