தமிழ்நாட்டிற்கு எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசு தண்ணீரை திறக்க கூடாது: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கருத்து

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. இந்த நீர் தமிழகத்திற்கு போதுமானதல்ல என்றாலும் கூட, அதைக் கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசு தண்ணீரை திறக்க கூடாது. விவசாயிகள் மீதும், பெங்களூரு மக்கள் மீதும் அக்கறை இருந்தால் அரசு தண்ணீரை திறந்துவிட்டு இருக்காது. பெங்களூரு மக்களின் மெளனம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்டை மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து நம்முடைய நிலம், நீர், பொருளாதாரத்தை பயன்படுத்தி வசதியாக இருப்பவர்கள் கூட காவிரிக்காக குரல் எழுப்பவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டிற்கு எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசு தண்ணீரை திறக்க கூடாது: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: