மக்களவையில் பதவியேற்பு விழா நிறைவு தமிழில் உறுதிமொழி ஏற்ற தமிழக எம்பிக்கள்: அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் பொறுப்பேற்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கூடியது. இதில், மக்களவையில் புதிய எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. முதல் நாளில், பிரதமர் மோடி உள்ளிட்ட 262 எம்பிக்கள் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, கூட்டத்தொடரின் 2வது நாளான நேற்று எஞ்சிய எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த எம்பிக்கள் தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றதால் அவையே அதிர்ந்தது. மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்ட பிறகு ‘நீட் வேண்டாம், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டார்.

அடுத்து, திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கதிர் ஆனந்த் ஆகியோரும் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டனர். பலரும் உறுதிமொழி ஏற்ற பிறகு வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு என முழக்கமிட்டனர். திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் தமிழில் பதவியேற்றுக் கொண்ட பிறகு தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக என முழக்கமிட்டார். விசிக எம்பி ரவிக்குமார் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்று கொண்ட பிறகு, வாழ்க அம்பேத்கர், வாழ்க பெரியார், வாழ்க எழுச்சி தமிழர் என முழக்கமிட்டார். விசிக தலைவர் திருமாவளவன் தமிழில் பதவியேற்ற பிறகு வாழ்க இந்திய அரசியலமைப்பு சட்டம், வாழ்க தேசிய ஒருமைப்பாடு என முழக்கமிட்டார். கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி கோபிநாத் தெலுங்கில் உறுதிமொழி வாசித்தார்.

கடைசியில் தமிழில் நன்றி, வணக்கம், ஜெய் தமிழ்நாடு என முடித்தார். மேலும், பல எம்பிக்கள் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியபடி பதவியேற்றனர். இதே போல, ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கையில் அரசிலமைப்பு புத்தகத்தை ஏந்தியபடி பதவியேற்றார். பதவியேற்ற பிறகு ‘ஜெய் ஹிந்த், ஜெய் சம்விதான்’ என்றார். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பதவியேற்றனர். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 2 எம்பிக்கள் பதவியேற்ற போது, அவையில் இருந்த காங்கிரஸ் எம்பிக்கள் ‘மணிப்பூர், மணிப்பூர்’ என ஆதரவாக கோஷமிட்டனர். நேற்றுடன் எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வு நிறைவடைந்தது.

* சிறையில் உள்ள எம்பி விழாவுக்கு வரவில்லை
பஞ்சாப்பின் கதூர் சாஹிப் தொகுதி எம்பியும், சீக்கிய மத பிரசாரகருமான அம்ரித் பால் சிங் நேற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. இவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர பஞ்சாப்பின் 12 எம்பிக்களும் பதவியேற்றனர். இதே போல, நேற்று முன்தினம் காஷ்மீர் பாராமுல்லா தொகுதி எம்பி இன்ஜினியர் ரஷீத் பதவியேற்க வரவில்லை. இவர் உபா சட்டத்தின் கீழ் டெல்லி திகார் சிறையில் உள்ளார். இவர்கள் இருவருக்கும் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சிறை நிர்வாகங்கள் தரப்பில் அனுமதி தரப்படவில்லை என கூறப்படுகிறது.

* ‘ஜெய் பாலஸ்தீனம்’ என முழக்கமிட்ட ஓவைசி
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எம்பி அசாதுதீன் ஓவைசி உருது மொழியில் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்கும் முன்பாக சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். பின்னர் உறுதிமொழி வாசித்து முடித்ததும், ‘ஜெய் பீம் ஜெய் பீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம்’ என்றார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பாலஸ்தீனத்தை குறிப்பிட்டதற்கும் ஆளுங்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் குறுக்கிட்டு, ‘‘உறுதிமொழி, சத்தியபிரமாணத்தில் கூறப்பட்டதைத் தவிர வேறு வாசகங்களை கூறுவதை உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும். வேறு வாசகங்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும்’’ என்றார்.

The post மக்களவையில் பதவியேற்பு விழா நிறைவு தமிழில் உறுதிமொழி ஏற்ற தமிழக எம்பிக்கள்: அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: