மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: தற்காலிக சபாநாயகருக்கு சோனியா கடிதம்

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற 10 சதவீத தொகுதிகளில் அந்த அரசியல் கட்சி வெற்றி பெற்றிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி கடந்த 2 பொதுத் தேர்தல்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெறாததால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறமுடியவில்லை. இந்த முறை காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று டெல்லியில் கடந்த 8ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் டெல்லி இல்லத்தில் நேற்று இரவு மக்களவையில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில், எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்தனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றகுழு தலைவர் சோனியா காந்தி தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்க்கு கடிதம் எழுதியுள்ளார்.மற்ற நியமனங்கள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார். 5 முறை எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி தற்போது உ.பியின் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

The post மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: தற்காலிக சபாநாயகருக்கு சோனியா கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: