தமிழர் கலாசாரத்தை பறைசாற்றும் விழா

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழர்கள், முத்தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்கள், சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள், இயல், இசை, நாடகம் என ஆய கலைகள் அறுபத்தினான்கும் தமிழர்களின் கலாசாரத்தை பறைசாற்றுகின்றன. கலாசாரம் எனப்படுவது வாழ்வியல் பழக்கவழக்கங்கள், ஆடை அணிகலன்கள், கலைகள் போன்றவற்றின் மூலம் வெளிப்படும் மக்களின் பிரதிபலிப்பாகும். தமிழர்கள் வேட்டி, சேலை எனும் ஆடை கலாசாரத்தை உடையவர்கள். இவர்கள் அதிகம் இந்து சமயம் சார்ந்தவர்கள். இவர்களது வாழ்வியல் வழிபாட்டு முறைகள் போன்றன அதிகளவான சடங்கு சம்பிரதாயங்களை கொண்டு காணப்படுகின்றன. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வரும் நிகழ்வுகள், திருமணம், புதுமனை புகுதல், தொழில் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளை சுப நிகழ்வுகளாக கொண்டாடி தமது கலாசாரத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

அதிக தெய்வ நம்பிக்கை உடையவர்களாக விளங்கினர். தமிழர்கள் தமது பண்பாடு கலாசாரங்களை வெளிக்காட்டும் மாபெரும் கோயில்களை அமைத்திருந்தனர். இது தமிழர்களின் கட்டட கலை சிற்பக்கலை ஓவிய கலை, நாட்டிய கலை போன்ற கலைகளையும் இறை நம்பிக்கையையும் பல தலைமுறைகளை தாண்டி உலகத்துக்கே பறை சாற்றும் அதிசயங்களாகும். தமிழ் நாட்டில் அமைந்துள்ள “தஞ்சை பெருங்கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தில்லை நடராஜர் கோயில் போன்ற ஆயிரக்கணக்கான கோயில்கள் தமிழர் கலாசாரத்தை வெளிக்காட்டும் உலகமே வியந்து பார்க்கும் அதிசயங்கள் ஆகும்.

மங்கல இசை வாத்தியங்களின் புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில், உடுக்கு, பறை, மணி மற்றும் சங்கு போன்ற இசைக்கருவிகள் தமிழர் கலாசார இசைக்கருவிகளாகும். தமிழில் எழுந்த ஒப்பற்ற இசைப்பாடல்கள் தமிழர்களின் இசை ஆர்வத்தை எடுத்து காட்டும். என்றும் பெருமை மிக்க சங்கப்பாடல்கள் ஜம்பெரும் காப்பியங்கள், பதினெண் கீழ் மேல் கணக்கு நூல்கள், கம்பராமாயணம் என பல நூறு மாபெரும் இலக்கிய வரலாற்றை கொண்டவை. தமிழ் கலாசாரம் நடனம், நாடகம், கூத்து போன்ற எம் மண்ணுக்குரிய கலைகளை கொண்டதுவே. காதலும், வீரமும், அன்பும், இயற்கையும், மனிதமும், கலைகளும் ஒருங்கே சங்கமிக்கும் தமிழ் கலாசாரம் என்றைக்கும் பெருமைக்குரியதாகும்.

The post தமிழர் கலாசாரத்தை பறைசாற்றும் விழா appeared first on Dinakaran.

Related Stories: