கோடை காலத்தில் குதூகல கோயில் திருவிழாக்கள்

பண்டைத் தமிழ் மக்கள் கொண்டாடிய விழா

பண்டைத் தமிழ் மக்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை. இளவேனில் விழா குறித்து கலித் தொகையில் உள்ளது.

அம்மன் ஆலய வழிபாடு

முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போன நிலமே பாலை. விடலை, காளை, மறவர், மறத்தியர் பாலை நிலத்து மக்கள். பாலை நிலத்தின் கடவுள் ‘கொற்றவை’. கொற்றவைக்கு அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சி முதலியன படைக்கப் படும். கொற்றவை பவனி வரும்போது புல்லாங்குழல் இசைக்கப்படும். பாலை நில மக்கள் தாங்கள் போருக்குச் செல்லும் முன்னர் போரில் வெற்றியடைய தங்கள் தெய்வத்தை வழிபடுவர். அது காலப்போக்கில் கிராமத்து தேவதை மற்றும் பல்வேறு அம்மன் கோயில்களாக மாறின. விழாக்களும் பெரும்பாலும் கோடை நாட்களில் நடந்தன. நடந்து கொண்டிருக்கின்றன.

சிலப்பதிகாரத்தில் சாக்கியர் கூத்து

சிலப்பதிகாரத்தில் இந்த சாக்கியர் கூத்து பற்றிக் கூறப்பட்டுள்ளது. சேர நாட்டை ஆண்ட சேரன் செங்குட்டுவன், விண்ணுலகம் சென்ற கண்ணகிக்கு கோயில் எழுப்ப வேண்டி, இமயத்திலிருந்து கல்லைக் கொணர, வட நாடு சென்றான்; தன்னை எதிர்த்த ஆரிய அரசர்களை வென்று கல்லைக் கொணர்ந்தான். அவன் வஞ்சி மாநகர் மீண்ட போது, அன்று அவனது களைப்பைப் போக்க கூத்தச் சாக்கையன் நடனமாட வரவழைக்கப்பட்டான். சிலம்பில் ‘‘பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்’’ என்ற வரிகளால் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்
மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.

வெயில் உகந்த அம்மன்

பாலை நில கடவுள் கொற்றவை (துர்க்கை). பொதுவாக சித்திரை வைகாசி என்பது மேஷ ரிஷப ராசிகளில் சூரியனின் பிரவேசத்தைக் குறிக்கும். சூரியன் மிக அதிகமாக வெப்பத்தை உமிழும் கத்தரி வெயில் காலம் இதில் தான் வருகிறது. கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும். இன்றைக்கும் வெப்பம் அதிகமான பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்கள், குறிப்பாக மதுரைக்கு தெற்கே உள்ள பகுதிகளில், வெயில் உகந்த அம்மன் கோயில்கள் என்ற பெயரோடு வழங்குவதைக் காணலாம். இந்தப் பெயருக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக திருச்செந்தூர் பகுதியில் உள்ள வெயில் உகந்த அம்மன் என்கிற பெயர், முருகனுக்கு வேல் உகந்து தந்ததால் வேல் உகந்த அம்மனாக இருந்து, திரிந்து, வெயில் உகந்த அம்மனாக மாறியது என்கிறார்கள். பெயர் பலகைகளில் வெயில் உகந்த அம்மன் என்றே பல கோயில்களில் இருக்கிறது. அம்மனுடைய சுடர் விழிகளில் சூரியன் இருப்பதால் அவள் வெயிலை உகக்கத்தானே செய்வாள்.

 

The post கோடை காலத்தில் குதூகல கோயில் திருவிழாக்கள் appeared first on Dinakaran.

Related Stories: