தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களுக்கு ரூ.6,194 கோடி பேரிடர் நிதி: அமித்ஷா உத்தரவு

புதுடெல்லி; தமிழ்நாடுஉள்பட 19 மாநிலங்களுக்கு ரூ.6,194 கோடி பேரிடர் நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.6,194.40 கோடி வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தொகையானது 2022-23 ஆம் ஆண்டுக்கான மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஒன்றிய அரசின் பங்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் சட்டீஸ்கர், மேகாலயா, தெலங்கானா, உபி ஆகிய 4 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.1,209.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், கோவா, அரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கும் 2023-24ம் ஆண்டுக்கான நிதியாக ரூ.4,984.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு பருவமழை காலத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு இந்த நிதி உதவியாக இருக்கும். பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு ஏற்கனவே, 2023-24ம் ஆண்டில் 9 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.3,649.40 கோடியை வழங்க ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. 15வது நிதிக் கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2021-22 முதல் 2025-26 வரையிலான மாநில பேரிடர் நிதிக்காக ஒன்றிய அரசு ரூ.1,28,122.40 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களுக்கு ரூ.6,194 கோடி பேரிடர் நிதி: அமித்ஷா உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: