பாலாற்றில் எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும்: குப்பம் தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு

திருமலை: பாலாற்றில் எத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்க முடியுமோ, அத்தனை இடங்களிலும் அமைக்கப்படும் என்று குப்பம் தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பதவியேற்ற பின்னர் தன்னை 8 முறை எம்.எல்.ஏவாக தொடர்ந்து வெற்றி பெற செய்த குப்பம் தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
என்.டி. ராமராவ் தொடங்கிய அந்திரி- நிவா திட்டத்தின் கீழ் சைலம் அணையில் இருந்து கிருஷ்ணா நீரை 730 கிலோ மீட்டர் தொலைவில் மேட்டு பகுதியில் உள்ள குப்பத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக பணிகளை மேற்கொண்டேன். எனது ஆட்சியில் குப்பத்திற்கு 30 கிலோமீட்டர் தொலைவு வரை பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வி. கோட்டா வரை கொண்டுவரப்பட்டது.

ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி 5 ஆண்டுகளில் 5 கிலோ மீட்டருக்கு உண்டான பணிகளை மேற்கொண்டு சினிமா ஷூட்டிங் நடத்துவது போன்று தேர்தலுக்கு முன்பு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து பைப் மூலம் கால்வாயில் விட்டார்கள். வருங்காலத்தில் வறட்சி இல்லா பகுதியாக குப்பத்தை கொண்டு வந்து அந்திரி- நிவா திட்டத்தின் மூலம் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்பப்படும். பாலாற்றில் எத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்க முடியுமோ அத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும். தேவைப்பட்டால் நீர் (நீரேற்று திட்டம்) லிப்ட் இரிகேசன் திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். குப்பத்தில் விமான நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

The post பாலாற்றில் எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும்: குப்பம் தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: