விபத்துகளை தடுக்க நடவடிக்கை தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ775 கோடியில் சாலை சீரமைப்பு: டெண்டர் கோரியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்


சென்னை: தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ 775 கோடியில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. இந்த சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதால் விபத்துகள் தடுக்கப்படும். தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு சேலம் – தருமபுரி – கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை (என்.எச் 44) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள், குறிப்பாக, லாரிகள், கன்டெய்னர்கள் என பல ஆயிரம் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் மலைப்பாதை பகுதி சுமார் 6 கி.மீட்டர் தூரம் அமைந்துள்ளது.

இந்த சாலையில் கட்டமேடு முதல் போலீஸ் சோதனைச் சாவடி வரை 3 கி.மீ தூரம் மிகவும் சரிவாகவும், வளைவாகவும் காணப்படுகிறது. இதனால் மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக இந்த கணவாய் சாலை பகுதி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்து, 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு 12 வாகனங்கள் அடுத்தடுத்து சங்கிலித் தொடர் போல மோதி விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்தனர்.

இப்பகுதியில் விபத்துகளை தடுக்க வாகனங்களை மலைப்பாதை சாலையில் 30 கி.மீ. வேகத்தில் 2வது கியரில் இயக்க வேண்டும் என்று விதிமுறை கொண்டுவந்து, இதை மீறும் வாகனங்களுக்கு மின்னணு முறையில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சாலையில் கீறல்களை ஏற்படுத்தி, வாகனங்களின் வேகத்தை மட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டது.  தொப்பூர் கணவாய் பகுதியில் காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துகளை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், இப்பகுதிகளில் வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருவது தொடர்ந்து வருகிறது. தொப்பூர் கணவாய் பகுதியில் சாலையை சீரமைத்தால் மட்டுமே விபத்துகளைத் தவிர்க்க முடியும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டு பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தொப்பூர் கணவாய் பகுதியில் 6.6 கி.மீ சாலையை சீரமைக்க ஒன்றிய அரசு டெண்டர் கோரியுள்ளது. தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு சீரமைக்க ஒரு புதிய உயர்மட்ட சாலை அமைக்க அனுமதி அளித்து அதற்கான ஏல அறிவிப்பினை ரூ.775 கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறியதாவது: தொப்பூர் கனவாய் பகுதியில் விபத்து தடுக்க சுரங்கப்பாதை அமைக்கலாமா, வேறு சாலை அமைக்கலாமா என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த பகுதியில் 6.6 கி.மீ. தூரத்திற்கு சாலைகளை மேம்படுத்த ரூ.775 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு உயர்மட்ட சாலை அமைக்கப்படும். இதனால் விபத்துகள் பெருமளவில் குறையும், போக்குவரத்து நேரமும் குறையும். டெண்டரில் பங்கேற்க வரும் ஜன.30ம் தேதி கடைசி நாள். ஜன.31ம் தேதி டெண்டர் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post விபத்துகளை தடுக்க நடவடிக்கை தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ775 கோடியில் சாலை சீரமைப்பு: டெண்டர் கோரியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: