ரித்திகா சிங் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படத்தில் பாக்ஸிங் வீராங்கனையாக நடித்திருந்த ரித்திகா, ரீலில் மட்டும் அல்ல ரியலாகவும் ஒரு பாக்ஸிங் பியூட்டி.

இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து தமிழில், ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே என அடுத்தடுத்து படங்களின் வாய்ப்பு அவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க, தெலுங்கு, ஹிந்தி திரையுலகமும் சிவப்புக் கம்பளம் விரித்தது. அதனால் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார் ரித்திகா. தற்போது, அருண் விஜய்க்கு ஜோடியாக பாக்ஸர், விஜய் ஆண்டனி இயக்கும் பிச்சைக்காரன் 2, அரவிந்த் சாமியின் வணங்காமுடி, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள ரித்திகாவின் சமீபத்திய ரிலீஸ் இந்தியில் உருவான இன்-கார் திரைப்படம். இது இந்திமொழியில் உருவாகியிருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ரித்திகா தன்னுடைய ஃபிட்னெஸ் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

வொர்க்கவுட்ஸ்: எங்களோடது சின்ன குடும்பம். நான், அம்மா, அப்பா, தம்பி அவ்ளோதான். மூணு வயசுல இருந்து கராத்தே கத்துக்க ஆரம்பிச்சேன். என் அப்பாதான் எனக்கு குரு. அப்பா ஒரு ஜிம் நடத்துறார். எப்பவும் செம ஃபிட்டா இருப்பார். அவரைப் பார்த்துத்தான் நானும் ஒவ்வொண்ணா கத்துக்கிட்டேன். அப்பா ஜிம் டிரைனர் என்பதால், என் வாழ்க்கையில் உடற்பயிற்சியும் வொர்க்கவுட்ஸும் சிறுவயது முதலே தொடங்கிவிட்டது. அப்போதெல்லாம் பயிற்சிக்காக அப்பா அதிகாலையில் எழுப்பிவிடும்போது, வேண்டா வெறுப்பாகதான் எழுந்திரிப்பேன்.

பின்னர், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியது. குத்துச்சண்டையில் தேசிய விருதுகள் பெற்றது என ஒரு கட்டத்திற்கு பிறகு, ஸ்போர்ட்மேன் லைப் ஸ்டைல்களை அருகில் இருந்து கவனித்ததால், வொர்க்கவுட்ஸ் எனக்கு பிடித்தமானதாக மாறிவிட்டது. அதன்பிறகு தினமும் வொர்க்கவுட் செய்வதை ஒருபோதும் மிஸ் பண்ண மாட்டேன். வாக்கிங், ஜாகிங், டிரெட் மில் என வேர்வை சொட்ட சொட்ட அனைத்து விதமான கடுமையான பயிற்சிகளையும் மேற்கொள்ளுவேன்.

டயட்: எனக்கு டயட்டில் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வேன். அந்த வகையில், நாள்தோறும் நிறைய பழங்கள், காய்கறிகள் சாலட்கள் எடுத்துக்கொள்வேன். அதுபோன்று தினசரி தேவையான அளவு தண்ணீர் அருந்துவதையும் தவிர்க்க மாட்டேன். அதேசமயம், சாட் அயிட்டம் மற்றும் பாஸ்ட் ஃபுட் உணவுகளையும் அவ்வப்போது சுவைப்பேன். மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவுகளும் மிகவும் பிடிக்கும்.

பியூட்டி: நான் அடிப்படையில் ஒரு அத்லெட் என்பதால், மேக்கப் மீது எல்லாம் பெரிய கவனம் செலுத்தியதில்லை. நடிகையான பிறகுதான் மேக்கப்பில் பல வகைகள் இருப்பதையே தெரிந்துகொண்டேன். பொதுவாக, என்னுடைய அழகாக, ரசிகர்கள் பலரும் கூறுவது என்னுடைய கண்களையும், எனது சுருள்முடியையும்தான். நானும் இவற்றை எனது, அடையாளங்களாகவே பார்க்கிறேன்.

ரசிகர்கள் பலரும் என்னிடம் அதிகமாக கேட்பது இதுதான், எப்படி என் சுருட்டை முடியை ஃப்ரிஸ் செய்யாமல் வைத்திருக்கிறேன் என்பதுதான். சுருட்டைமுடி எனக்கு பிடித்திருப்பதால், அதை எப்போதும் தொந்தரவு செய்வதில்லை. மேலும் பலர், எப்படி சுருள்முடியை பாதுகாக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவதும், உடலை பிட்டாக வைத்திருப்பதுமே, என் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்க காரணம். எனக்கு ஒருபோதும் முடி உதிர்வதில்லை. இப்போது என் தலைமுடி நீளமாகவும் வளர்ந்திருக்கிறது.

பெரும்பாலும் தேங்காய் எண்ணெயை தவிர வேறு எதுவும் பயன்படுத்த மாட்டேன். சூட்டிங் நேரத்தில், ஹேர் ஸ்டைல் செய்ய வருபவர்கள் மிகவும் சிரமப் படுவார்கள். அதற்காக முடியை ஈரப்படுத்தி க்ரீம்கள் தடவி ஈரம் காய்வதற்குள் உடனே ஹேர் ஸ்டைல்கள் செய்துவிடுவார்கள். மேக்கப் என்று எடுத்துக்கொண்டால், சூட்டிங் நேரத்தை தவிர, நான் பெரிதாக மேக்கப் எதுவும் செய்வதில்லை. எனது கைப்பையில், எப்போதும் ஒரு பிரவுன் நிற லிப்ஸ்டிக் இருக்கும் அவ்வளவுதான்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரசேன்

The post ரித்திகா சிங் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: