உங்கள் குழந்தை சரியாக வளர்கிறதா?

நன்றி குங்குமம் தோழி

இயன்முறை மருத்துவம் சொல்லும் ‘ஹெல்ப்ஃபுல்’ டிப்ஸ்!

குழந்தைகள் கையில் பொருட்களைக் கொடுத்து, அதனை அவர்கள் பிடிக்கத் தெரிந்துவிட்டால் போதும், அப்போது ஆரம்பிக்கும் வீட்டில் உள்ளவர்களின் பாடு. உதாரணமாக கிலுகிலிப்பை பிடித்து விளையாடுவது, தவழ ஆரம்பித்ததும் வீட்டில் உள்ள பொருட்களை எடுப்பது என அட்டகாசம் தொடர்ந்துகொண்டே போகும். இப்படி பொருட்களை கையாளுவதில் உள்ள வளர்ச்சிப் படிநிலைகள் என்ன, இதில் வரும் பாதிப்புகளும், அதற்கான இயன்முறை மருத்துவ தீர்வும் என்ன என்பதையெல்லாம் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம், வாருங்கள்.

நுண்திறன் வளர்ச்சி…

தவழ்வது, நடப்பது, குதிப்பது எல்லாம் எப்படி பெரும்திறன் வளர்ச்சியை (Gross Motor Skills) சேர்ந்ததோ அதேபோல, பெரிய முதல் சிறிய வகை பொருட்களை எல்லாம் பிடித்துக் கையாளும் திறனை நுண்திறன் வளர்ச்சி ( Fine Motor Skills) என்பர்.

உதாரணமாக, தானாக உணவுப் பொருட்களை எடுத்து உண்பது, நுட்பமாக செய்யும் வேலைகளான உடைக்கு பொத்தான் போடுவது, காலணியை தானாக மாட்டிக்கொள்வது, புத்தகப் பக்கங்களைப் பிடித்து திருப்புவது, எழுதுகோல் பிடித்து எழுதுவது என கவனத்தைக் கூட்டும் செயல்களைச் சொல்லலாம். இவையெல்லாம் ஒவ்வொரு வயதிற்கும் மாறுபடும் என்பதால், குழந்தைகளின் முதல் ஐந்து வருடம் என்பது அவர்களின் பின்னாளைய வாழ்வுக்கான திறன்களின் அடித்தளம்.

வயதிற்கேற்ப..

0 – 2 மாதங்களில்…

* கைகளை இறுக்கமாக மூட முடியும்.
*கைகளை வெளியே விரிப்பது பின் மூடுவது (கட்டி அணைப்பது போல).

3 – 5 மாதங்களில்…

*வாய் அருகில் கைகளை அடிக்கடி எடுத்துச் செல்வது.
*விரல்களை சூப்புவது.
*விளையாட்டுப் பொருட்களை கையில் கொடுத்தால் வாங்கி அதனை ஆட்டுவது.

6 மாதங்களில்…

*பொம்மைகள் மீது அடித்து விளையாடுவது.
*ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு பொம்மைகளை மாற்றுவது.
*பிஸ்கெட், வேக வைத்த கேரட் துண்டு என பெரிய உணவுத் துண்டுகளை தானாக எடுத்து உண்பது.

7 – 9 மாதங்களில்…

*கைகளை முகத்திற்கு கொண்டு வந்து விளையாடுவது (உதாரணமாக, கண்ணாமூச்சி விளையாட்டு).
* ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தி பொருட்களைத் தொடுவது, விளையாடுவது.

10 – 12 மாதங்களில்…

*முதல் மூன்று விரல்களை வைத்து பொருட்களைப் பிடிப்பது (உதாரணமாக, பென்சில்).

*கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துப் பிடித்து பொம்மைகளை, பொருட்களை, உணவுப் பொருட்களை கையாள்வது.

*காலணி உறையை (Socks) கழற்றுவது.

*நாம் கைகளால் செய்யும் வேலைகளை பிரதிபலிப்பது (உதாரணமாக, நாம் தலை வாரினால் அதனைப் பார்த்து அவர்களும் தலை வாருவது).

1 – 2 வயதில்…

*கைகள் மற்றும் கரண்டி கொண்டு உணவினை தானாக உண்பதும், கீழே சிந்துவதும்.

*கைகளை உடம்பிற்கு நடுவே கொண்டுவந்து சேர்த்து விளையாடுவது மற்றும் பொருட்களை கையாள்வது. உதாரணமாக, இரு கைகளாலும் பழத்தை எடுத்து உண்பது, காகிதத்தை கிழிப்பது.

*எழுத்து பலகையில் கிறுக்குவது.

*ஒன்றன் மீது ஒன்றாக பொம்மைகளை அடுக்குவது.

2 – 3 வயதில்…

*தானாக தண்ணீர் அருந்துவது, கீழே சிந்துவது.
*தண்ணீர் போத்தல் (Water Bottle) மற்றும் டப்பாக்களின் மூடியை திறப்பதும், மூடுவதும்.
*கடுக்காய் அளவில் இருக்கும் மணிகளை (Toy Beads) நூலில் கோர்ப்பது.
*பலகையில் கோடு, வட்டம் போன்றவற்றை நாம் வரைந்தால் நம்மைப் பார்த்து வரைவது.
*க்ரேயான்ஸ் போன்ற பென்சிலை சரியான முறையில் பயன்படுத்துவது.
*குழந்தைகளுக்கான பிரத்யேக கத்திரிக்கோலை வைத்து காகிதத்தை நறுக்குவது.
* புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியாக திருப்புவது.

3 – 4 வயதில்…

*சிறு மணிகளை கோர்ப்பது.
*காகிதத்தை மடித்து விளையாடுவது.
*காகிதத்தில் கோடு வரைந்து கொடுத்தால் அந்தக் கோட்டின் மீது கத்திரிக்கோல் வைத்து நறுக்குவது.
*ஆடையில், பைகளில் உள்ள சிப் (Zip) போன்றவற்றை தானாக திறந்து மூடுவது.
*மனித முகத்தை வரைவது அல்லது சூரியன், மலை போன்று ஒற்றை உருவமாய் இருப்பவற்றை வரைவது.

4 – 5 வயதில்…

*உடையில் உள்ள பொத்தான்களை தானாக நேர்த்தியாக அணிவது.
*நேர்த்தியாக உணவினை எடுத்து கீழே சிந்தாமல் உண்பதும், நீரினை அருந்துவதும்.
*எளிதில் கத்திரிக்கோல் வைத்து வட்டம், சதுரம் போன்ற வரைந்த வடிவங்களை நறுக்குவது.

5 – 6 வயதில்…

*நீள்சதுரம் (rectangle) போன்ற வடிவங்களை நாம் வரைந்தால் அதைப் பார்த்து எளிதில் வரைவது.

*இரு புள்ளிகள் வைத்து கொடுத்தால் அதில் நேர்க்கோட்டினை வரைவது.

*பூனை, மரம் போன்ற எளிதில் குழந்தைகளுக்கு பதியக்கூடிய உருவங்களை வரைவது.

*எழுத்து மற்றும் எண்களை நாம் எழுதிக் கொடுத்தால் அதனைப் பார்த்து அவர்களும் வரைவது, எழுதுவது.

இந்தப் பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதத்தில் செய்வார்கள் என்பதால், நம் குழந்தையை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம். மேலும் இந்த வளர்ச்சி படிநிலைகளில் இரண்டு மாதம் முதல் ஐந்து மாதம் வரை தாமதமானால், அதுவரை நாம் காத்திருக்கலாம். அதற்கு மேலும் குழந்தை அந்த வளர்ச்சியினை அடையவில்லையெனில் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரிடம் அழைத்துச் சென்று உரிய ஆலோசனைகளை கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

ஏன் முக்கியம்…?

*இவ்வகை திறன்கள் அனைத்தும் குழந்தைகள் பொருட்களை கையாள்வதற்கு மட்டுமல்ல… அவர்களின் மூளைத் திறன் மேம்படவும் உதவுகிறது.

*இரு கைகளை இணைத்து உடம்பின் நடுவே கொண்டுவந்து செய்யும் எந்த ஒரு வேலையும் மூளையை அமைதிப் படுத்தும். மேலும் மூளையின், மனத்தின் வளர்ச்சியை தூண்டும். உதாரணமாக, பெரியவர்களாகிய நமக்கு பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது போன்ற செயல்களைச் சொல்லலாம்.

*பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இவ்வகை மூளை பயிற்சிகள் அதிகப் பலன்களை முதல் ஐந்து வயதில்
செய்தால் கொடுக்கும்.

*மூளைத் திறனை அதிகரிக்கும் செயல்களை நாம் சிறு வயதிலேயே அறிமுகம் செய்வதால், அவர்களால் எளிதில் எவ்வகைத் திறனையும் கற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, இசை கற்பது, தையல் போன்ற நுண்ணிய வேலைகளில் கை தேர்ந்தவராய் இருப்பது போன்றவை.

தாமத படிநிலை…

*சில குழந்தைகளுக்கு சரியான மாதத்தில் கவிழ்வது, உட்காருவது போன்ற வளர்ச்சியில் தாமதம் இருக்கலாம். இதனால் நாம் அதனை முன்னரே அறிந்து அதற்கான தக்க இயன்முறை மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதால், மேலே சொன்ன நுண்திறன் வளர்ச்சியில் தாமதம் இருக்காது.

* நுண்திறன் வளர்ச்சியில் தாமதம் இருக்கும் குழந்தைகளால் எழுதுவது, தானாக உணவினை எடுத்து உண்பது போன்ற வாழ்வியல் திறன்களை
எளிதில் செய்திட இயலாது.

* இவர்களின் கைகளில் உள்ள நுண்திறனுக்கான தசைகளில் போதிய வலிமை இருக்காது.

பக்க விளைவுகள்…

* கைகளில் உள்ள நுண்மைத் திறன் மூளையின் திறனோடு தொடர்புடையது என்பதால், குழந்தைகள் புத்திக்கூர்மையாக வளரும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

* இதனால் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது.

* மேலும், தொழில்நுட்பக் கல்வி கற்பதில் போதிய திறன் இல்லாமல் இருப்பது.

இயன்முறை மருத்துவ டிப்ஸ்…

* வீட்டில் குழந்தைகளை கட்டளைகள் இல்லாமல் விளையாட விடுவது சிறந்தது. அதாவது, அதை எடுக்கக் கூடாது, இதை களைக்கக் கூடாது என நிபந்தனைகள் இன்றி விளையாட விடுங்கள். கூர்மையான மற்றும் நஞ்சுப் பொருட்களை மட்டும் குழந்தைகள் கையாளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* வேர்க்கடலை, பாதாம், கடலைப்பருப்பு, சிறுபருப்பு என பெரிய அளவில் உள்ள உணவுப் பொருட்களை முதலிலும், பின் சிறிய வகைப் பொருட்களை சில மாதங்கள் கழித்தும் விளையாடக் கொடுக்கலாம். உதாரணமாக, ஒரு பாத்திரத்தில் முந்திரி பருப்புகளை போட்டுக் கொடுத்து அதனை வேறு ஒரு பாத்திரத்தில் ஒவ்வொன்றாக
எடுத்துப் போடச் சொல்லலாம்.

*கறிவேப்பிலை கிள்ளுவது, துணி காய வைக்கும் போது கிளிப் குத்துவது அல்லது எடுப்பது என தினசரி நாம் என்னவெல்லாம் செய்கிறோமோ அதில் எல்லாம் அவர்களை ஈடுபடுத்த முயல வேண்டும்.

இயன்முறை மருத்துவம்…

நுண்திறன் தாமதமாகும் குழந்தைகளுக்கு மருந்து மாத்திரைகள் என எதுவும் இல்லையென்பதால், வாழ்வியல் மாற்றங்களும் இயன்முறை மருத்துவமும் மட்டுமே உதவும். ஆகையால் மேலே சொன்ன நுண்திறன்களில் ஏதேனும் தாமதம் இருந்தால், அருகில் உள்ள இயன்முறை மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் சென்று பரிசோதனை செய்வது அவசியம். தேவை இருக்கும் எனில், ‘பிரத்யேக இயன்முறை மருத்துவ விளையாட்டு வழி பயிற்சிகள்’ குழந்தைகளுக்கு தரப்படும்.

இதனால் அவர்களின் திறன் மேம்படும்.மேலும் ஆட்டிசம், டவுன்ஸ் சிண்ட்ரோம், மூளை வாதம், தாமத வளர்ச்சி உள்ள குழந்தைகள், துறுதுறு குழந்தைகள் என வேறு பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் நுண்திறன் குறைந்திருக்கும் வாய்ப்பு இருப்பதால், அவர்கள் கட்டாயம் இயன்முறை மருத்துவ சிகிச்சை தொடர்ந்து எடுக்க வேண்டும்.

கடினமான பயிற்சிகள் இருக்குமோ எனக் குழம்ப வேண்டாம். விளையாட்டு வழியில் குழந்தைகளுக்கு புரியும்படி விளையாட்டுப் பொருட்களை வைத்துதான் சிகிச்சை இருக்கும். இதனை ‘பிளே தெரபி’ (Play Therapy) என மருத்துவத்தில் அழைப்போம்.வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வீதம் ஒரு நாளிற்கு முப்பது நிமிடங்கள் சிகிச்சை இருக்கும். குறைந்தது ஆறு மாதம் இருக்கும். சில குழந்தைகளுக்கு மூன்று வருடங்கள் கூட ஆகலாம்.

மொத்தத்தில் குழந்தைகள் சேட்டை செய்யாமல் இருக்க செல்போன் கொடுத்து அடிமையாக்காமல், அவர்கள் விருப்பம் போல விளையாட விடுவதால் அவர்களுக்குத் தேவையான வளர்ச்சியை அவர்களே எடுத்துக்கொண்டு சிறப்பாக வளர்வார்கள் என்பதனை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

The post உங்கள் குழந்தை சரியாக வளர்கிறதா? appeared first on Dinakaran.

Related Stories: