பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். ஆனால், 2015 -இல் இவரது நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படமே இவருக்கு இந்தியளவில் ரசிகர்களை பெற்று தந்தது. தற்போது, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

மேடம் துசாட் அருங்காட்சியகத்தில் மெழுகு சிற்பம் வைக்கப்பட்டிருக்கும் தென்னிந்திய நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவார். சமீபத்தில் இவரது நடிப்பில் சலார் திரைப்படம் வெளியானது. அதில், சிக்ஸ் பேக் வைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவர், தனது ஒவ்வொரு படத்துக்கும் ஏற்றவாறு முழு அர்ப்பணிப்புடன் தனது உடலை அவ்வப்போது மாற்றிக் கொள்ளக்கூடியவர். இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் பார்த்தால், ஒவ்வொன்றிலும் இவர் ஒவ்வொரு மாதிரியான தோற்றத்தில் காணப்படுவார். பிரபாஸின் ஃபிட்னெஸ் குறித்து பார்ப்போம்.

வொர்க்கவுட்ஸ்: பொதுவாக ஃபிட்னெஸ் என்பது ஒவ்வொருவருமே கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சிகளுக்காக ஒவ்வொருவரும் நேரத்தை ஒதுக்க வேண்டும். அதிலும், நடிகர்களுக்கு ஃபிட்னெஸ் என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதுதான் எங்களது மூலாதாரமே. அதனால் எனது ஃபிட்னெஸ் விஷயத்தில் ஆர்வமாகவும், கவனமாகவும் இருப்பேன். அதற்காக ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஜிம்மே கதி என்று கிடப்பவன் இல்லை நான். ஒரு நாளில் குறைந்தபட்சம் முக்கால் மணி நேரம் அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சிகளை செய்வதில்லை. எனது தினசரி உடற்பயிற்சிகளை பிரித்துக் கொள்வேன். அதற்குகேற்றவாறு
பயிற்சிகளை மேற்கொள்வேன்.

உதாரணமாக, காலை எழுந்ததும் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி, கைப்பந்து விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவேன். அதன்பிறகு ஜிம் பயிற்சிகள் தொடங்குவேன். காலையில் கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டால் மாலையில் பளு தூக்குதல் போன்ற மற்ற பயிற்சிகளை செய்வேன். பொதுவாக எனது ஃபிட்னெஸ் ரகசியம் என்றால் அது 30 சதவீதம் உடற்பயிற்சி 70 சதவீதம் உணவு கட்டுப்பாடு இவை இரண்டும்தான்.

என்னைப் பொறுத்தவரை, உடற்பயிற்சி செய்வது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள மட்டும் உதவுவதில்லை. மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் ஒரு சிறந்த வழி. மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள நினைத்தால், உடற்பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. இதற்காகவே, எனது இல்லத்திலேயே 1.5 கோடி செலவில் நவீன உடற்பயிற்சிக்கான உபகரணங்களுடன் ஜிம் செட்டப் செய்து வைத்துள்ளேன்.

அதுபோன்று ஃபிட்னெஸின் இன்னொரு முக்கிய அம்சம் தூக்கம். தினமும் போதுமான அளவு தூக்கத்தை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். தூக்கம் ஒருவரது ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். எனவே எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் போதுமான அளவு தூக்கத்தை தவறவிடமாட்டேன்.

டயட்: உணவு விஷயத்தை பொறுத்தவரை, நாக்குக்கு பிடித்த உணவு வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லை. வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளும் உணவு நாக்குக்கு பிடிப்பதில்லை. இதுதான் அடிப்படை. இதை உணர்ந்து கொண்டு எவையெல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகள் என்று அறிந்து சரிவிகித உணவை பின்பற்றினோம் என்றால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். நாவை கட்டுப்படுத்துவது என்பது கஷ்டமான விஷயம்தான். ஆனால் நடிகர்களுக்கு ஃபிட்னெஸ் மிகவும் முக்கியம் அல்லவா அதனால், அதில்
எப்போதும் கவனமாக இருப்பேன்.

அதுபோன்று, நான் ஒரு படத்துக்கு தேர்வானதும், அந்த கதாபாத்திரத்திற்கு என்ன மாதிரியான உடல் அமைப்பு தேவையென்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு என் டயட்டை மாற்றிக் கொள்வேன். அந்தப்படம் முடிவடைந்ததும் மீண்டும் எனது சராசரி உடலமைபை மாறிவிடுவேன். மற்றபடி என் வீட்டில் அம்மா அசைவ உணவுகளை அருமையாக சமைப்பார். அம்மாவின் சமையலை சுவைக்க ஆரம்பித்துவிட்டால் டயட்டை மறந்து அதிகமாகவே சாப்பிட்டுவிடுவேன். பின்னர், மீண்டும் அதற்கு தேவையான உடற்பயிற்சியை செய்து கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவேன்.

எனக்கு பிடித்த உணவுகள் என்றால் சிக்கன், முட்டை, மீன் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை விரும்பி சாப்பிடுவேன். அதுபோன்று அரிசி சாதத்தைப் பொறுத்தவரை வெள்ளை அரிசியை தவிர்த்துவிட்டு பழுப்பு அரிசியில் சமைத்த சாதத்தைதான் சாப்பிடுகிறேன். அதுபோன்று வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் சிறுதானிய வகையான குயினோவா ஆகியவற்றை உட்கொள்கிறேன்.

இவை என் தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் ஆற்றலை தருகிறது. மற்றபடி எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்புகள், பானங்கள் மற்றும் வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்துவிடுவேன். முடிந்தளவு உணவு இடைவெளியில் பழங்கள், காய்கறி சாலட் போன்றவற்றை எடுத்துக் கொள்வேன். இவை சரியான சமநிலையுடன் இருக்க உதவுகிறது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்! appeared first on Dinakaran.

Related Stories: