கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்

காலத்தினால் செய்த லேசர் சிகிச்சை!

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

என்னுடன் பள்ளியில் படித்த தோழி அவர். சிறு வயது முதலே கண்ணாடி அணிந்திருப்பவர். நான் மருத்துவக் கல்லூரியில் படித்த நேரத்தில் தோழி பொறியியல் படித்து வந்தார். வழக்கமான கண்பரிசோதனைக்குச் சென்றிருந்த போது அவரது விழித்திரையின் ஓரத்தில் சிறிய ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டு அதற்கு லேசர் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் சுமார் இருபது வருடங்களாக அவருக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.

தற்சமயம் வேறொரு பெருநகரத்தில் இருக்கும் அவருக்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் கண்விழித்தவுடன், முன்பு லேசர் செய்யப்பட்ட அதே இடது கண்ணின் பார்வை வட்டத்தில் திரை போட்டாற்போன்ற உணர்வு இருக்கிறது என்று கூறினார். உடனடியாகக் கண் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்யுமாறு கூறினேன். அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மருத்துவமனைக்கு விரைந்திருந்தார் அவர். அப்பொழுது அந்த திரை போட்ட இடம் இன்னும் கொஞ்சம் பெரிதாகி இருந்தது. அதாவது இடது கண்ணில் பார்வை தெரியாத பகுதி (blind spot) சற்றே அதிகமாகி இருந்தது.

அவரை முழுவதுமாகப் பரிசோதித்த கண் மருத்துவர்கள், உங்களது கண்ணில் விழித்திரை விலகல் (retinal detachment) ஏற்பட்டுள்ளது. அதாவது அவை இரண்டு பகுதிகளாகப் பிரிந்து விட்டன. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். தோழிக்குப் பெரும் பதட்டம். “சின்ன வயசுலயே இந்த மாதிரி பிரச்னை வரக்கூடாதுன்னு தானே லேசர் வச்சாங்க? அப்புறம் ஏன் இப்படி ஆச்சு?” என்பது அவருடைய கேள்வி.

பொதுவாக அதிக மைனஸ் பவரை உடைய கண்ணாடியை அணிந்திருப்பவர்களுக்கு (high myopes) இந்த நிலை ஏற்படலாம். இவர்களுக்கு இயல்பிலேயே கண்கள் சற்றுப் பெரிதாக இருக்கும். ஒரு பலூனைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை ஓரளவுக்கு ஊதிப் பெரிதாக்குகிறீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று பலூனின் உள்ளே காற்றை நிரப்பி அதைச் சற்றே பெரிதாக்குகிறீர்கள். இப்பொழுது அந்த பலூனின் மேற்புறத்தை உற்றுப் பாருங்கள்.

ஆங்காங்கே மெலிதான பகுதிகளை நீங்கள் பார்க்க முடியும். ஒரு பாலித்தீன் பையை அதிகமாக இழுத்தாலும் இதே போன்ற மெல்லிய பகுதிகள் தோன்றும். இந்தப் பகுதிகள் தான் சீக்கிரம் உடையக் கூடியவை. ஒருவேளை அந்த பலூனோ, பாலித்தீன் பையோ தன்னால் உடையப் போகிறது என்றால், அந்த மெலிதான இடத்தின் வழியே தான் விரிசல் ஏற்படும். இதே தான் அளவில் சற்றுப் பெரிய கண்களிலும் நிகழ்கிறது.

கண்களின் வெளிப்படலமான Sclera நம் கண்களின் பின்பகுதியில் விழித்திரையுடன் இணையும் இடத்தில் சிறு சிறு புள்ளிகள் போன்ற ஓட்டைகள் (retinal holes) தோன்றலாம். கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நடக்கும் பரிசோதனையின் போது சொட்டு மருந்து ஒன்றை ஊற்றி 15 முதல் 30 நிமிடம் வரை அமர வைத்திருப்பார்கள். அதன்பின் மருத்துவர் விழித்திரையைப் பரிசோதனை செய்வார்.

இப்படிப் பரிசோதிக்கையில் விழித்திரையின் பின்புறம் ஏதேனும் மெல்லிய புள்ளிகள் தென்படுகிறதா என்பதையும் மருத்துவர் உற்று நோக்குவார். உங்கள் விழித்திரையில் விலகல் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருக்கக் கூடும் என்று பொது கண் மருத்துவர் (general ophthalmologist) சந்தேகித்தால், அவர் உங்களை ஒரு விழித்திரை சிறப்பு நிபுணரிடம் அனுப்பி வைப்பார். விழித்திரை சிறப்பு நிபுணர் indirect ophthalmoscope கருவி மூலம் உங்களைப் படுக்க வைத்த நிலையில் விழித்திரை ஓரங்களை பரிசோதிப்பார்.

இப்படித்தான் கல்லூரிக் காலத்தில் தோழிக்கும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஓட்டைகளின் வழியே விழித்திரையின் பின்புறம் உள்ள நீர் கசிந்து விழித்திரையின் அடுக்குகளைப் பிரிய வைத்து விட வாய்ப்பிருப்பதால் தோழிக்கு அந்த ஓட்டையை சுற்றி லேசர் சிகிச்சை செய்யப்பட்டது. A stitch in time saves nine என்ற ஆங்கிலப் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். துணியில் லேசான கிழிசல் அல்லது சிறிய ஓட்டை இருக்கும் பொழுது அதைச் சுற்றி தையல் இடுவது போல் தான் இந்த லேசர் சிகிச்சையும்.

லேசர் கதிர்களால் அந்த ஓட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூடு வைப்பது போல் செய்து விட்டால் விழித்திரையின் இரண்டு அடுக்குகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு ‘ஸ்டாப்லர் பின்’ அடித்தது போன்ற நிலை ஏற்பட்டு விடும். இதனை‌ barrage laser என்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு இப்படியான லேசர் சிகிச்சைகள் செய்வது மட்டுமே ஆயுள் முழுமைக்கும் போதுமானது.

தோழிக்கு முன்பிருந்த அதே பழைய ஓட்டையின் வழியே நீர் கசிந்திருக்கக்கூடும் அல்லது கண்ணின் இயல்பான மெல்லிய தன்மையால் வேறொரு புதிய இடத்தில் ஓட்டை உருவாகி அதன் வழியே நீர்க் கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும். இதனால்தான் அதிக பவர் உள்ள கண்ணாடிகளை அணியும் நோயாளிகளைத் தவறாமல் கண் பரிசோதனை செய்ய அறிவுறுத்துகிறோம். விழித்திரை விலகலுக்கான அறுவை சிகிச்சை இரண்டு அல்லது மூன்று நிலைகளாக ஒரே நேரத்தில் செய்யப்படும்.

கசிந்து விட்ட நீரை (sub retinal fluid) வெளியேற்றுவது சிகிச்சையின் முதல் படி, பின் விலகியிருக்கும் விழித்திரையின் இரண்டு அடுக்குகளை ஒட்டி தையல் போடுவது (scleral buckling) அடுத்த நிலை. மீண்டும் அவை பிரிந்து விடாமல் இருப்பதற்காக சிலிகான் ஆயில் அல்லது ஒரு விதமான வாயுவை வைத்து அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள் (silicon oil or gas implantation). இது அடுத்த நிலை. சிலருக்கு கூடுதலாக ஒன்று இரண்டு சிகிச்சைகளும் தேவைப்படும்.

சிகிச்சை குறித்து அவருக்கு விளக்கப்பட்டவுடன், “இவ்வளவு சிக்கலான அறுவைசிகிச்சையா?” என்று தோழி மிகவும் பதட்டம் அடைந்தார். ஏனெனில் முழுக்க முழுக்க கண்களுக்கு வேலை கொடுக்கும் மென்பொருள் துறையில் பணிபுரிபவர் அவர். இரண்டு சிறு குழந்தைகள் வேறு இருக்கிறார்களே, என்ன செய்வது என்ற கவலை அவருக்கு.
பொதுவாக விழித்திரை விலகல் பிரச்னைகள் ஏற்பட்ட பின் அறுவைசிகிச்சை செய்தாலும் முழுவதுமாக பழைய பார்வையை மீட்டெடுப்பது கடினம்தான். Snellen அட்டையில் மூன்று அல்லது நான்கு வரிகள் தெரியாமல் கூட போகலாம்.‌ இருந்தும் முதல் அறிகுறி தென்பட்ட அன்றே தோழிக்கு அறுவைசிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டதால் பெரிய பாதிப்பு ஏதும் நிகழ்ந்திருக்காது என்று எனக்குத் தோன்றியது.

மிகச் சிறப்பான விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் அவளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அடுத்த பரிசோதனைகளின் போது எதிர்பார்த்ததை விட நல்ல விளைவே கிடைத்தது. அறுவைசிகிச்சை முடிந்து இன்றுடன் மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தோழி தன்னுடைய சமீபத்திய பரிசோதனை அறிக்கையை அனுப்பியிருந்தார். இப்பொழுது மீண்டும் பழைய பார்வையையே பெற்று விட்டார்.

முன்பு அணிந்திருந்த கண்ணாடியின் அளவில் மட்டும் மிகச் சிறிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அறுவைசிகிச்சை முடிந்த ஒரே மாதத்தில் தன் வழக்கமான பணிகளுக்குத் திரும்பி விட்டார் தோழி. அடுத்த கண்ணிலும் இதே அளவிலான கண்ணாடியைத்தான் அணிந்திருக்கிறார். அதனால் முன்பை விட இன்னும் விரைவாக, சீராக பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்பதை அவளது விழித்திரை சிறப்பு ஆலோசகரைப் போலவே நானும் வலியுறுத்தினேன்.

இன்னொரு நோயாளி. இவரும் மேலே குறிப்பிட்ட தோழியை போன்று அதிகமான பவரை உடைய கண்ணாடியைத் தான் அணிந்திருந்தார். அவருக்கும் விழித்திரை விலகல் குறித்து முன்பே விளக்கியிருந்தேன். 22 வயதை நிறைவு செய்த பின் அவர் லேசர் சிகிச்சை செய்து கொண்டார். இப்பொழுது அவருக்குக் கண்ணாடி தேவையில்லை என்ற நிலையில், “இப்பதான் லேசர் பண்ணி பவரை சரி பண்ணியாச்சுல்ல மேடம்? இனிமே வருஷா வருஷம் செக் பண்ணத் தேவையில்லைல்ல?” என்றார்.

நிச்சயமாக நீங்கள் உங்கள் பழைய படியே வருடாந்திர பரிசோதனையைத் தொடர வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அது ஏன் மேடம் என்றால், அவர், ஏனெனில் என் விழித்திரை விலகல் பிரச்னை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் கண் பந்தில் அளவு வழக்கத்தை விடப் பெரிதாக இருப்பதுதான். லேசர் உள்ளிட்ட பிற அறுவை சிகிச்சைகளில் கண்ணின் அச்சு நீளத்தை நாம் எந்த விதத்திலும் மாற்றுவதில்லை.

லேசர் சிகிச்சை என்றால் கருவிழியின் கனத்தை மாற்றி அமைக்கிறோம். சில அறுவை சிகிச்சைகளில் கூடுதலாக ஒரு லென்ஸை பொருத்துகிறோம். அவ்வளவுதான். வெளியில் இருந்து கண்ணாடி செய்ய வேண்டிய வேலையை கண்ணுக்கு உள்ளேயே செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் ஓரளவுக்கு சீர் செய்கின்றன. உங்கள் விழித்திரை மெலிதாக இருப்பது எப்போதும் போலவே தான் இருக்கிறது. அதனால் வழக்கமான பரிசோதனையைத் தொடர வேண்டும். லேசர் சிகிச்சை செய்து கொண்ட பின்னரும் கூட விழித்திரையில் ஓட்டைகளோ, விலகல் பிரச்னையோ ஏற்படலாம் என்பதை அவருக்கு விளக்கினேன்.

மெலிதான விழித்திரை மட்டுமின்றி, காயங்கள், சர்க்கரை நோய், விழித்திரையின் பின்பகுதியில் ஏற்படும் புற்று நோய்கள், நீர்க்கட்டிகள், வயது முதிர்வால் ஏற்படும் விழித்திரை பிரச்னைகள் இவற்றிலும் விழித்திரை விலகல் பிரச்சனை ஏற்படலாம். பல கண் நோய்களைப் போலவே இந்தப் பிரச்னையையும் சீரான பரிசோதனை மூலமும், விரைவான சிகிச்சை மூலமும் முழுவதுமாக சரி செய்ய முடியும். என் தோழிக்கு நடந்ததைப் போல!

The post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே appeared first on Dinakaran.

Related Stories: