வைட்டமின் D குறைபாடு காரணமும் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தைக் கண்டு நாம் ஓடி ஒளிந்து கொள்கிறோம். சன்ஸ்க்ரீன் கொண்டு சருமத்தை வெப்பத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்கிறோம். ஆனால் சூரிய ஒளி நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணராமலே. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் D நமது உடலுக்கு ஏன் தேவை என்பதை அறிந்து கொள்வோம்.

வைட்டமின் D என்பது நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும். இதனை நேரடியாக சூரிய ஒளியிடமிருந்து மட்டுமே பெற முடியும். இது உடலுக்கு சரிவரக் கிடைக்காதபோது வைட்டமின் D குறைபாடு ஏற்படுகிறது. சமீபகாலமாக வைட்டமின் D குறைபாட்டை கொண்டிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் இந்த வைட்டமின் Dயை உடலால் வேறு எந்த வழிகளிலும் உற்பத்தி செய்ய முடியாததே இதற்கு முக்கிய காரணம்.

மேலும், இன்றைய காலத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களுக்கு நமது உடல் பழகிவிட்டதும், இயற்கையான வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்துவிட்டதும் மற்றொரு காரணமாகும்.
இந்த வைட்டமின் D மற்ற வைட்டமின்கள் போல் பெற முடியாது. சூரிய ஒளியில் வெளிப்படும்போது மட்டுமே உடல் வைட்டமின் Dயை உற்பத்தி செய்கிறது.

வைட்டமின் Dயில் இரண்டு வகைகள் உள்ளன. டி 2 எர்கோகால்சிஃபெரால். இது தாவர உணவுகள் மற்றும் சப்ளிமென்ட்ஸ் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. டி 3 என்று அழைக்கப்படும் கோல்கால்சிஃபெரால் என்று சொல்லக்கூடிய இவை வலுவூட்டப்பட்ட உணவுகள் மற்றும் இறைச்சி உணவுகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கிறது. பொதுவான நிறத்தை கொண்டிருக்கும் நபருக்கு முகத்தில் மற்றும் முன் கைகளின் நடுவில் நாள் முழுவதும் 2 முதல் 3 முறை சூரிய ஒளி படும்போது அது வைட்டமின் D தயாரிக்க போதுமானதாகிறது.

கருமையான சருமத்தை கொண்டிருப்பவர்கள், முதியவர்களுக்கு வைட்டமின் D அதிகம் தேவைப்படுகிறது. அதற்காக சூரியக் குளியல் செய்ய வேண்டியதில்லை. சருமத்திற்கு சூரிய ஒளியில் சிறிது நேரம் இருந்தாலே போதுமானது.

வைட்டமின் D குறைபாடு ஏற்பட என்ன காரணம்

பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே அடங்கியிருப்பவர்களுக்கு சூரியஒளி பெற முடியாத காரணத்தினால் வைட்டமின் D குறைபாடு உண்டாகும் அபாயம் உள்ளது.
சன்ஸ்க்ரீன் அதிகமாக பயன்படுத்துவோருக்கும் வைட்டமின் D குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எஸ்பிஎஃப் 30 சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது சருமத்தில் வைட்டமின் D தொகுப்பை 95% அதிகமாக குறைக்கிறது.

இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் மக்களுக்கு போதுமான வைட்டமின் D கிடைக்காது. அதனால் வாரத்தில் இரண்டு முறை 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் வெளிப்படுவது போதுமான அளவு வைட்டமின் D தயாரிக்க உதவுகிறது. தீவிரமான சைவ உணவு கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் வைட்டமின் D குறைபாட்டை எதிர்கொள்வார்கள். மீன் மற்றும் மீன் எண்ணெய், முட்டை, மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, வலுவூட்டப்பட்ட பால், பால் பொருள்கள் மற்றும் மாட்டிறைச்சி, கல்லீரல் போன்றவற்றில் மிகுதியாக உள்ளது. அதனால் சைவ உணவை எடுத்துக் கொள்பவர்கள் வைட்டமின் D குறைபாட்டை எதிர்கொள்ள வாய்ப்பு அதிகம்.

வெளிர் நிற சருமத்தை கொண்டிருப்பவர்களுக்கு வைட்டமின் D குறைபாடு அபாயம் அதிகம் உள்ளது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மெலனின் நிறமி சருமத்துக்கு அதன் நிறத்தை வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. எனவே, கருமையான தோல் கொண்டிருப்பவர்களுடன் ஒப்பிடும்போது வெளிர் நிற சருமம் உள்ளவர்கள் குறைவான மெலனின் கொண்டிருக்கிறார்கள். இதனால் சூரிய ஒளியின் வெளிப்பாட்டில் வைட்டமின் D உற்பத்தி செய்யும் சருமத்தின் திறன் குறைகிறது.

பருமனாக இருப்பவர்கள் மீது மேற்கொண்ட ஆய்வில் 40க்கு மேல் பிஎம்ஐ உள்ளவர்களுக்கு 40 விழுக்காட்டுக்கும் குறைவான பிஎம்ஐ உள்ளவர்களை விட 18 விழுக்காடு குறைவான வைட்டமின் D அளவுகள் இருப்பதை குறிக்கிறது.வயதாகும்போது சருமத்துக்கு சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் D ஐ உற்பத்தி செய்யும் திறன் குறைந்து போகிறது. இதன் காரணமாகதான் வயதானவர்கள் இந்த குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வயதானவர்களுக்கு சிறுநீரகங்களின் செயல்திறனும் வயது மூப்பு காரணமாக குறைந்து போகிறது. இதுவும் வைட்டமின் D உற்பத்தி செயலில் சிரமத்தை எதிர்கொள்கிறது. இதனாலும் வைட்டமின் D குறைபாடு உண்டாகும் அபாயம் அதிகரிக்கிறது.

செரிமான சிக்கல் உள்ளவர்களுக்கும் வைட்டமின் D குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம், கிரோன் நோய், சிஸ்டிக், ஃபைப்ரோஸிஸ் மற்றும் செலியாக் நோய் போன்ற மருத்துவ பிரச்னைகள் மற்றும் போரியாட்ரிக் அறுவை சிகிச்சை போன்ற நோய்களுக்கு நாள்பட்ட மருந்துகள் எடுத்துக் கொள்வதால் வைட்டமின் D உற்பத்தி செய்யும் திறன் இவர்களுக்கு குறைவாக இருப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், நாள்பட்ட சிறுநீரக நோய்கள், முதன்மை ஹைபர்பாரைராய்டிசம் நாள்பட்ட கிளைகோமா உருவாக்கும் கோளாறுகள் மற்றும் லிம்போக்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வைட்டமின் D இழப்பால் பாதிக்கப்படுகின்றனர். இது வைட்டமின் D முறிவை தூண்டுகிறது உடலில் வைட்டமின் D அளவு குறைவாக இருக்கும்.

வைட்டமின் Dயை பெறுவது எப்படி?

பல ஆய்வுகள் மதிய நேரம் சூரிய ஒளியை பெறுவதற்கான சரியான நேரம் என நிரூபித்துள்ளது. இந்த நேரத்தில் அதாவது நண்பகலில் சூரியன் தலைக்கு மேல் இருக்கும். அதை உச்சிவெயில் பொழுது என்பார்கள். அப்போது அதன் புற ஊதாக் கதிர்கள் தீவிரமாக இருக்கும். எனவே குறைந்த நேரத்திலேயே அதிக வைட்டமின் D கிடைப்பதற்கான நேரமாக நண்பகல் வேளை இருக்கும். இதற்கு குறைந்தபட்சம் 10 நிமிடங்களும், அதிகபட்சமாக 30 நிமிடங்களும் சன்பாத் என்னும் சூரிய குளியலை மேற்கொள்ளலாம். வைட்டமின் D யை பெறுவதற்கு நண்பகல் நேரம் பாதுகாப்பானதாக இருக்கும்.

சூரியனிடமிருந்து வைட்டமின் Dயை பெற உங்கள் சருமத்தின் பெரும்பகுதியை சூரியனில் காட்டுவது அவசியமாகும். எனவே அதற்கு ஏற்றாற்போல ஒரு குறுகிய ஸ்லீவ் அல்லது ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போன்ற ஆடைகளை அணியலாம். சன்பாத்தின்போது கடுமையான வெயிலில் நீண்ட நேரம் அமராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இதனால் சருமம் பழுப்புநிறமாக மாற வாய்ப்புண்டு. சூரியன் உங்கள் முகத்தை நேரடியாக தாக்க வாய்ப்புள்ளது.

எனவே தலையில் ஒரு தொப்பியோ அல்லது முகத்தில் கண் கண்ணாடி அணிந்து கொள்ளலாம். வாரத்திற்கு 3 முதல் 4 முறை இந்த சூரியக் குளியலை மேற்கொள்ளலாம். இது உடலுக்கு தேவையான வைட்டமின் Dயை ஈடு செய்ய உதவும். அதுபோன்று, சன் ஸ்க்ரீன் சூரிய ஒளியை பிரதிபலிக்க கூடிய அல்லது சிதறடிக்கக் கூடிய சில ராசாயனங்களைக் கொண்டுள்ளன. இதனால், சில ஆய்வுகள் 30% அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகள் கொண்ட சன் ஸ்க்ரீன்கள் உடலில் வைட்டமின் D உற்பத்தியை 95 முதல் 98 சதவீதம் வரை குறைப்பதாக கண்டறிந்துள்ளது. எனவே சன் ஸ்க்ரீன் உபயோகிக்கும் முன் அதன் அளவுகளை தெரிந்துகொண்டு பின்னர் உபயோகிக்க வேண்டும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post வைட்டமின் D குறைபாடு காரணமும் தீர்வும்! appeared first on Dinakaran.

Related Stories: