ங போல் வளை

நன்றி குங்குமம் டாக்டர்

யோகம் அறிவோம்!

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

சொன்னபடி கேளு

யோகமென்பது உடலுபாதைகளைத் தீர்க்கும் ஒரு மாற்று மருந்து என்கிற கருத்து சற்று மேலும் புனிதப்படுத்தப்பட்டு இன்று, போலி சிகிச்சை முறையாக மாறிவருவதை அனைத்து ஊடகங்களிலும் காண முடிகிறது. அதிலும் திரையில் தோன்றி சர்வ ரோக நிவாரணியாக யோகத்தை முன்வைக்கும் நபர்களும் உலகம் முழுவதுமே வளர்ந்து வருகின்றனர் என்பதைப் பார்க்கிறோம்.

கை விரல் நகங்களை, ஒன்றை ஒன்று உரசும்படி அடிக்கடி தேய்ப்பதால் நன்றாக முடிவளரும் என்றும் சர்க்கரை நோயைக் குணப்படுத்த கையின் சுண்டுவிரலை ஒரு குறிப்பிட்ட விதத்தில் அழுத்திப் பிடித்தால் மருந்து மாத்திரைகளே எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் விளம்பரப்படுத்தப்படுவதில் எந்த உண்மைத்தன்மையும் இருப்பதில்லை. மாறாக, சர்க்கரை நோயுள்ள அந்த நபர் மேலும் உபாதைக்கே ஆளாகிறார்.அப்படியெனில் ‘யோகசிகிச்சை என்பது சாத்தியமில்லையா? என்கிற கேள்வி எழுகிறது.

இதை மிக விரிவாக யோக மரபு பேசியுள்ளது. அதன் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மேலே சொன்ன போலிகளை கண்டு ஏமாறாமல் இருக்க உதவும்.வைத்தியரும் முனிவருமான பதஞ்சலி ‘அங்கமேஜயத்வம்’ எனும் சொல்லிலிருந்து தொடங்குகிறார். அதற்கு உடலும் மனமும் இணைந்து செயல்புரியாமை அல்லது கட்டுப்பாடின்மை. உடல்-மனம் சொல் கேளாமை எனப் பல அர்த்தங்கள் கொடுக்கலாம்.இந்த ‘அங்கமேஜயத்வம்’ எதிர் நிலை பண்புகளை நம்முள் உருவாக்குகிறது.

முதலில், ‘சுவாச பிரசுவாச’ எனும் எதிர்நிலை. இந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதருக்கு சுவாசம் கட்டுப்பாடின்றி தவறுதலாக நடைபெறும். அதன் மூலம் உள்ளுறுப்புகள் அடையக்கூடிய ஆற்றலை இழக்கும். சுவாசத்தின் தடுமாற்றம் மனதிலும் வெளிப்படும். அவர் பதட்டமும், பயமும் மிக்க மனிதராக மாறுவார். அதேபோல் ஒவ்வொரு பருவ மாற்றத்தின் போதும் ஏதேனும் ஒரு உடல்நல சிக்கலுக்கு ஆளாவார். அதிலிருந்து மீளவும் நீண்ட நாட்களை எடுத்துக்கொள்வார்.

அடுத்தது, ‘துக்கம்’ எனும் நிலை. உடல் மற்றும் மனதின் வேதனைகள், குறிப்பிட்டு சொல்லும்படியில்லாத துக்கங்கள், சிறு வலியையும் தாங்கிக்கொள்ள முடியாமை என ஒரு தடையை உருவாக்குகிறது. அடுத்ததாக ‘நம்பிக்கையின்மை’ எனும் எதிர்நிலை. தன்மீதும் தான் சார்ந்த சிகிச்சை, பயிற்சி அல்லது தன் காரியங்களின் மீதும் ஏற்படும் சந்தேகம். அதனைத் தொடர்ந்து உருவாகும் மன நெருக்கடி அல்லது உளைச்சல். இப்படி மேலே சொல்லப்பட்ட உடல், உள்ளம், உணர்ச்சிகளில் தடை இருக்கும் பொழுது ஒருவருக்கு எந்த வித சிகிச்சையும் பலனளிப்பதில்லை. ஆகவே ஒரு யோகக்கல்வி முறை என்பது முதலில் குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த தடைகளைக் கடக்கும் சாதனமாக இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் யோகசிகிச்சை என்பது மூன்று கட்டங்களால் ஆனது. இந்த சிகிச்சை முழுமையாகப் பலன் தர வேண்டுமெனில், மேலே சொன்ன தடைகளை ஓரளவேனும் தாண்டியிருக்க வேண்டும். உதாரணமாக ‘தெளர்மனஸ்யம்’ எனும் நிலைக்கு சந்தேகம், நம்பிக்கையின்மை என்று பொருள். அதாவது, தான் செய்து கொண்டிருக்கும் சிகிச்சையில் நம்பிக்கை இல்லாத ஒருவர் உள்ளத்தளவில் அந்த சிகிச்சைக்கு எதிராகவே செயல்படுகிறார். அந்த நம்பிக்கையற்ற மனதுடன் தொடரும் சிகிச்சை, பலனளிக்கவில்லை என்பது மேலும் மேலும் மன உளைச்சலை உருவாக்கி நோய்களை பெருக்கிக்கொள்ளவே வாய்ப்பு அதிகம். ஆகவே மேலே சொன்னவற்றிலிருந்து சற்றேனும் விடுபடாத ஒருவருக்கு ‘யோக சிகிச்சை பலனளிப்பதில்லை.

யோக சிகிச்சையின் முதல் கட்டமே மிகச்சரியான உளப்பயிற்சியை ஏற்படுத்துவதுதான். இதில் ஆசிரியர் சொல்லே இறுதியானது. அவர் சொல்லும் பயிற்சிகளை செய்தே ஆகவேண்டும். சோம்பலை முற்றிலுமாக நீக்கிவிட்டு குறிப்பிட்ட கால அவகாசத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொடுக்கப்பட்ட பயிற்சிகள் அனைத்தையும் செய்வதற்கு, மாணவர் தயாராக இருக்க வேண்டும். அந்த தீவிரத்தன்மை இருந்தால் மட்டுமே சில வாரங்களில் தீர்வுகளையும், சிகிச்சையின் பலன்களையும் அடைய முடியும்.

அடுத்ததாக, உடல் இயங்கியலின் அடிப்படைகளை சீரமைத்தல், நரம்பு மண்டலத்திலும், உடல் கட்டுமானத்திலும் உள்ள சமநிலை குறைபாட்டை தேக்க நிலையை மாற்றி அமைத்தல். ஓர் ஆசிரியர் உடனிருந்து மாணவரின் அல்லது சிகிச்சை பெறுபவரின் பயிற்சிக்கு உதவுதல், படிப்படியாக அடுத்தகட்ட பயிற்சிகள் செய்ய ஊக்குவித்தல், மாணவருக்கு உடலளவிலும் உள்ளத்திலும் இருந்த எல்லைகளை விரிவுபடுத்துதல். உதாரணமாக, தரையில் உட்காரவே முடியாது. ஆகையால் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்கிறேன் எனும் நிலையில் இருப்பவரை படிப்படியாக தரையில் அமர்ந்து இலகுவாக பயிற்சிகளை செய்ய வைத்தல். கண்களை மூடினாலே தலை சுற்றும் அல்லது மயக்கம் வரும் என்கிற நரம்பியல் மற்றும் மனோ ரீதியான எல்லைகள் கொண்டவரை அப்படியான ஆழ்ந்த பயிற்சிகளுக்கு தயார்படுத்துதல்.

இறுதியாக இந்த மாற்று சிகிச்சை முறையையும் அதன் அம்சங்களையும் தெளிவாக புரியவைத்தல் மற்றும் குணமாதல் சார்ந்த சாத்தியங்களை விவரித்தலும் அதை ஊக்குவித்தலும் மிகவும் முக்கியம். ஏனெனில், இந்த மாற்று சிகிச்சையில் இருக்கும்போதே மனம் சலிப்படைந்து பயிற்சிகளையும், முறைமைகளையும் விட்டுவிட்டு உடனடி நிவாரணி ஏதேனும் இருக்குமா? என மாணவர்கள் விலகிவிட வாய்ப்புள்ளது. ஆகவே, அவர்களிடம் மிகத் தெளிவாக சிகிச்சைக்கான காலத்தையும், குணமாகும் நிலையையும் தெரியப்படுத்துதல் அவசியம்.

அவர்களுடைய நோயின் ஆரம்ப கட்ட தீவிரத்தையும் பயிற்சியின் மூலம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் தெளிவு படுத்தவேண்டும்.அதை அவர்களே உணர்ந்து பார்க்க செய்யும் சில ‘அவதானிப்பு’ பயிற்சிகளும் யோக சிகிச்சை முறையில் இருக்க வேண்டும். பயிற்சியின் கால அளவு முக்கியம். உதாரணமாக சர்க்கரை நோய் சிகிச்சையை யோகத்தின் மூலம் வழங்க முடிவு செய்தால், ஒவ்வொரு நாளும் அந்த ஆறு அல்லது ஏழு பயிற்சிகளை அதே குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும்.

அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கையும், அளவும் மாறக்கூடாது. ஒரு சில பயிற்சிகள் மிகவும் சுலபமாகவும் சுகமாகவும் இருக்கிறது என்று கருதி அதை மட்டுமே பயிற்சி செய்துகொண்டிருக்கக் கூடாது. எண்ணிக்கையையும் அதிகரிக்கக் கூடாது. இப்படியான நேரக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். இது போக அவர் அடிப்படை மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்றால் அதையும் தொடர வேண்டும்.

யோக சிகிச்சையில் வரும் மிகப்பெரிய பிரச்னையே, இந்த இடம்தான். பெரும்பாலான யோக ஆசிரியர்கள் பயிற்சிகளை மட்டுமே செய்யுங்கள் மருந்து மாத்திரையை நிறுத்திவிடுங்கள் என அறிவுறுத்துகின்றனர். இது முற்றிலும் தவறான சிகிச்சைமுறை. அதன் மூலம் மேலும் மோசமான பக்கவிளைவுகளே உண்டாகும்.இப்படி பல நுட்பமான விஷயங்களை அறிந்து யோக சிகிச்சைக்கு ஒருவர் செல்லலாம். ஒருவேளை நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் இங்கே முற்றிலும் குணமடையும். அதற்கு சரியான வழிகாட்டுதலும், பொறுமையும், தீவிரதன்மையும் தேவையாக இருக்கிறது.

ஏனெனில், யோகமுறை என்பது ஒவ்வொரு பயிற்சியின் கட்டுமானத்திலும் உடல் உள்ளம் இரண்டுக்கும் இடையே மிகச்சரியான ஒரு இணைப்பை ஏற்படுத்துதலே. அது நிகழும் பொழுது உடலும் உள்ளமும் நம் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அப்படி இயங்குவது நாம் நம் வாழ்வை நமக்கு உகந்தது போல வாழ்கிறோம் என்றே அர்த்தம்.

பத்த கோணாசனம்

இந்தப் பகுதியில் நாம் ‘பத்த கோணாசனம்’ எனும் நிலையைப் பார்க்கலாம். கால்களை மடித்து, பாதங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்த்துவைத்து, கை விரல்களை கோத்து, காலைப் பிடித்துக்கொள்ளவும். குதிகால்கள் உடம்புக்கு மிக அருகில் வருமாறு வைத்துக்கொள்ள வேண்டும். தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதி நிமிர்ந்த நிலையில் இருக்கட்டும். தொடைகள் இரண்டும் தரையைத் தொட்ட நிலையில் இருந்தால் நல்லது. ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இறுதி நிலையில் இருக்கலாம். மெதுவாக மூச்சை கவனிக்கலாம். சில மாதங்களுக்குப் பிறகு முன்புறமாகக் குனிந்து தரையைத் தலையால் தொட முயற்சி செய்யவும்.

The post ங போல் வளை appeared first on Dinakaran.

Related Stories: